மத்திய அரசுக்கு எதிராக கேரள முதல்வர் போராட்டம்

ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை பாலக்காட்டில் இருந்து ஹரியாணாவுக்கு மாற்றியதை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் நடத்தினார்.
மத்திய அரசுக்கு எதிராக கேரள முதல்வர் போராட்டம்

1980-இல் மத்திய அரசு, ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை கேரளாவில் அமைப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், அது பஞ்சாப்பின் கபுர்தாலாவுக்கு மாற்றப்பட்டது. பின்னர், 2008 ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பெட்டி தொழிற்சாலை பாலக்காட்டில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த திட்டத்துக்காக கேரள அரசு 239 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.

இதையடுத்து, 2013-இல் மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி இந்த திட்டத்துக்காக அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தியதற்கு 43 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த திட்டம் தற்போது பாலக்காட்டில் இருந்து ஹரியாணாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ரயில் பவன் முன்பு இடதுசாரி ஜனநாயக முன்னணி எம்பி-க்களுடன் போராட்டம் நடத்தினார். 

இதுகுறித்து பினராயி விஜயன் கூறுகையில்,

"பல மத்திய அரசுகள் கேரளாவை ஏமாற்றி வருகிறது. ரயில் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று 36 வருடங்களுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டது" என்று குற்றம்சாட்டினார்.    

இதற்கிடையில், பிரதமரை சந்திக்க பினராயி விஜயன் நேரம் கேட்டதற்கு 4-ஆவது முறையாக அனுமதி வழங்க மறுக்கப்பட்டது. கடைசியாக ஜூன் 16 மற்றும் 21 ஆகிய தேதிகளில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

இந்த விவகாரத்தில் தில்லி முதல்வர் கேஜரிவால் பினராயி விஜயனுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் கேஜரிவால் கூறியதாவது, 

"முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஒருவர் சந்திக்க நேரம் கேட்பதை எப்படி பிரதமர் மறுக்க முடியும். ஏழை மக்களுக்கான ரேஷன் பிரச்சனை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தவேண்டும். ஒரு முதல்வரை சந்திக்க 4 முறை தொடர்ச்சியாக மறுப்பது முன்எப்போதும் இல்லாத கையாளுதல். கூட்டாட்சி முறை எங்கே?" என்றார். 

முன்னதாக, தில்லி முதல்வர் கேஜரிவால் ஆளுநர் மாளிகையில் நடத்திய போராட்டத்தின் போது பினராயி விஜயன் அதற்கு ஆதரவுக் கரம் நீட்டியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com