அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 29 பொருள்கள் மீதான வரி அதிகரிப்பு: இந்தியா பதிலடி

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, எஃகு பொருள்கள், பருப்பு வகைகள் உள்ளிட்ட 29 வகையான பொருள்கள் மீதான வரியை இந்தியா அதிகரித்துள்ளது
அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 29 பொருள்கள் மீதான வரி அதிகரிப்பு: இந்தியா பதிலடி

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, எஃகு பொருள்கள், பருப்பு வகைகள் உள்ளிட்ட 29 வகையான பொருள்கள் மீதான வரியை இந்தியா அதிகரித்துள்ளது. இந்தியத் தயாரிப்பு பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ளதற்கு பதிலடியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, எஃகு, அலுமினியம் தயாரிப்பு பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா தன்னிச்சையாக அண்மையில் அதிகரித்தது. இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 1.5 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு, எஃகு, அலுமினியப் பொருள்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் திடீர் வரி அதிகரிப்பு நடவடிக்கையால், இந்திய எஃகு துறைக்கு 198.6 மில்லியன் டாலர்களும், அலுமினிய பொருள்கள் தயாரிப்புத் துறைக்கு 42.4 மில்லியன் டாலர்களும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச வர்த்தக அமைப்பிடம் இந்தியா சார்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டிலிருந்து இறக்குமதியாகும் 29 வகை பொருள்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா உயர்த்தியுள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் கொண்டை கடலை, கடலைப் பருப்பு ஆகியவை மீதான இறக்குமதி வரி 30 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பயறு மீதான இறக்குமதி வரி 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தோட்டுடன் கூடிய பாதாம் பருப்பு மீதான இறக்குமதி வரி ஒரு கிலோவுக்கு ரூ.100-லிருந்து ரூ.120-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தோடு இல்லாத பாதாம் பருப்பு மீதான இறக்குமதி வரி ஒரு கிலோவுக்கு ரூ.35-லிருந்து ரூ.42-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வால்நட் மீதான இறக்குமதி வரி 30 சதவீதத்தில் இருந்து 120 சதவீதமாகவும், ஆப்பிள் மீதான இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாகவும், போரிக் அமிலம் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 17.50 சதவீதமாகவும், பாஸ்பரீக் அமிலம் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இரும்புப் பொருள்கள் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 27.50 சதவீதமாகவும், துருப்பிடிக்காத எஃகு பொருள்கள் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 22.50 சதவீதமாகவும், ஆர்டிமியா எனப்படும் ஒருவகை இறால் மீன் மீதான இறக்குமதி வரி 30 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிம் சாக்கெட் போன்ற செல்லிடப்பேசி தயாரிப்பு சாதனங்கள் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவை மீதான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 4 முதல் அமல்: இந்த வரி உயர்வு, வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அந்த அறிவிப்பில் மத்திய நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்க அரசானது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களால், தங்கள் நாட்டுத் தயாரிப்பு பொருள்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் தடுக்கும் வகையிலான கொள்கைகளை தற்போது கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதான வரியை அதிகரிப்பதென்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளும், ஆசிய நாடான சீனாவும் முடிவு செய்துள்ளன.
இதனால், அமெரிக்காவுக்கும், பிற நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் மூண்டிருப்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. இதனிடையே, உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா சார்பில் கடந்த வாரம் அளிக்கப்பட்ட அறிக்கையில், 30 பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதம் வரை உயர்த்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், 800 சிசி குதிரை திறனுக்கும் அதிகமான திறனை கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீது இறக்குமதி வரியை அதிகரிப்பது குறித்த தகவல் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை. 
அதேநேரத்தில், ஹார்லி டேவிட்சன், டிரையம்ப் போன்ற நிறுவனங்களின் மோட்டார் சைக்கிள்கள் மீது இறக்குமதி வரியை உயர்த்தத் திட்டமிட்டிருப்பதாக இந்தியா தெரிவித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com