ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

ஈரானில் தவித்து வரும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 
ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

ஈரானில் தவித்து வரும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை எழுதிய கடிதம்: தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் ஈரானில் தவித்து வருவதைத் தங்களது நேரடி கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்தியாவுக்குத் திரும்ப முடியாமலும், ஈரானிலேயே தொடர்ந்து மீன்பிடி பணிகளை மேற்கொள்ள முடியாமலும் அவர்கள் தொடர்ந்து தவித்து வருகின்றனர். 
ஈரான் நாட்டைச் சேர்ந்த முகம்மது ஷாலா மற்றும் அவரது சகோதரர்களுடன் இணைந்து அவர்களுக்குச் சொந்தமான மூன்று படகுகளில் ஆறு மாதங்களுக்கும் மேலாக தமிழக மீனவர்கள் மீன்பிடிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
சில காலங்களாக, வேலைவாய்ப்பு அளித்து வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்தோர், ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு உரிய பங்கை அளிக்கவில்லை. இதனால், மீனவர்கள் தங்களது தினசரி செலவுகளை எதிர்கொள்ள முடியாமலும், குடும்பங்களுக்குப் பணத்தை அனுப்ப இயலாமலும் போராடி வருகின்றனர்.
கடவுச்சீட்டு பறிமுதல்: ஈரானில் வேலைவாய்ப்பு அளித்து வந்தவர்களிடம் இருந்து உரிய தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையை தமிழக மீனவர்கள் முற்றிலும் இழந்து விட்டனர். இதையடுத்து, தாயகமான இந்தியா திரும்புவதற்குரிய ஏற்பாடுகளையாவது செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்தக் கோரிக்கையை ஈரானைச் சேர்ந்த வேலைஅளிப்போர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இத்துடன் மீனவர்களின் கடவுச்சீட்டுகளையும் உள்ளூர் வேலை அளிப்போர்கள் பறிமுதல் செய்து வைத்துள்ளதாகவும், மீனவர்களை இந்தியாவுக்கு அனுப்பாமலும், அதேசமயம் வேலை எதையும் அளிக்காமலும் உள்ளனர். அத்துடன் மீனவர்களுக்குத் தங்கும் இடமோ, உணவோ, பாதுகாப்போ அளிக்காமல் அவர்களை நடுவீதியில் விட்டு விட்டுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த ஏழை மீனவர்களை உடனடியாக ஈரானில் இருந்து தாயகம் திரும்ப வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துக்குத் தாங்கள் உத்தரவிட வேண்டும். மீனவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாக்கித் தொகைகள் அளித்திடுவதை உறுதி செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் விரைந்து தாயகம் திரும்பும் விஷயத்தில் அவர்களது குடும்பத்தினர் மிகுந்த கவலையும், எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கின்றனர். எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com