கேரளம்: நச்சு ரசாயனத்தில் பதப்படுத்தப்பட்ட 6,000 கிலோ மீன்கள் பறிமுதல்

கேரளத்தில் நச்சு ரசாயனம் மூலம் பதப்படுத்தப்பட்ட 6,000 மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கேரளத்தில் நச்சு ரசாயனம் மூலம் பதப்படுத்தப்பட்ட 6,000 மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 கேரளத்தில் மீன்கள் கையாளுதல் மற்றும் விநியோகத்தில் சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக "சாகர் ராணி' என்ற பெயரில், மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
 அதன் ஒரு பகுதியாக, பாலக்காடு மாவட்டம், வாளையாறு சோதனைச் சாவடியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திரத்தில் இருந்து மீன்கள் ஏற்றி வந்த 45 லாரிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில், ஃபார்மலின் எனப்படும் நச்சுத் தன்மை கொண்ட ரசாயனத்தை கலந்து மீன்கள் எடுத்துவரப்பட்டது கண்டறியப்பட்டது. பின்னர், லாரிகளில் இருந்த 6,000 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
 ஃபார்மலின் ரசாயனம், பிணவறைகளில் சடலங்களைப் பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் நச்சுத் தன்மை கொண்ட ரசாயனம் ஆகும். இதனை, மீன்கள், பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருள்களை பதப்படுத்துவதற்கு பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுத் தகவல்கள் எச்சரிக்கின்றன.
 கேரளத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனைகளில் நச்சு ரசாயனத்தில் பதப்படுத்தப்பட்ட சுமார் 12,000 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது மீண்டும் 6,000 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவின் உத்தரவின்பேரில், "சாகர் ராணி' நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களை அவ்வப்போது சோதனையிட்டு வருகிறோம்.
 இந்நிலையில், கேரள உணவு பாதுகாப்புத் துறை இணை ஆணையர் தலைமையில் கோழிக்கோடு, எர்ணாகுளம், பாலக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள், வாளையாறு சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஃபார்மலின் ரசாயனம் மூலம் பதப்படுத்தப்பட்ட 6,000 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனை மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார் அந்த அதிகாரி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com