சேர்க்கை மறுப்பு: 19 மாணவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க மருத்துவக் கல்லூரிக்கு உத்தரவு

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட 19 மாணவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட 19 மாணவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 அந்தத் தொகையை, மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்தி வரும் அமைப்பான பரவீஷ் நியாந்தரன் சமிதியிடம் 3 மாதங்களில் அந்த மருத்துவக் கல்லூரி நிர்வாகம் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 மகாராஷ்டிர மாநிலம், ஜல்காவ்ன் நகரில் உள்ள டாக்டர் உல்ஹாஸ் பாட்டீல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2012-13-ஆம் கல்வியாண்டில் விண்ணப்பித்திருந்த தகுதியான 19 மாணவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த மாணவர்கள், மாவட்ட ஆட்சியரிடமும், பரவீஷ் நியாந்தரன் சமிதி அமைப்பிடமும் புகார் கொடுத்தனர். மும்பை உயர் நீதிமன்றத்திலும் அவர்கள் வழக்கு தொடுத்தனர்.
 அந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை உயர் நீதிமன்றத்தின் ஒüரங்கபாத் கிளை, கடந்த மார்ச் 27-ஆம் தேதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
 அதில், அனுமதி மறுக்கப்பட்ட 19 மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; இவர்களுக்குப் பதிலாக அந்த கல்லூரியில் சட்ட விரோதமாக சேர்ந்த 19 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும்; மேலும், மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
 இந்த உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பளித்தது. அதில், நீதிபதிகள் கூறியதாவது:
 பணம் சம்பாதிக்கும் நோக்தத்தில் தகுதியுடைய மாணவர்களுக்குப் பதிலாக, தகுதி குறைந்த மாணவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை கல்லூரி நிர்வாகம் சேர்த்துள்ளது. பணம் கொடுத்து சேர்ந்த மாணவர்களும் மருத்துவப் படிப்பை முடித்து விட்டு வெளியேறி விட்டனர். எனவே, அவர்களின் சேர்க்கையை ரத்து செய்ய முடியாது.
 மேலும், பாதிக்கப்பட்ட 19 மாணவர்களுக்கும் தலா ரூ.20 லட்சம் வழங்குவதற்கு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஒப்புக் கொண்டு விட்டது.
 ஆகவே, கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது சரியாக இருக்காது. அங்கீகாரம் ரத்து செய்வது குறித்து மும்பை உயர் நீதிமன்றம் முடிவு செய்யும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com