பி.ஹெச்டி. முறைகேடுகளைத் தடுக்க மென்பொருளைப் பயன்படுத்த மத்திய அரசு முடிவு

முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், ஏற்கெனவே முனைவர் பட்டம் (பி.ஹெச்டி.) பெற்றவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து
பி.ஹெச்டி. முறைகேடுகளைத் தடுக்க மென்பொருளைப் பயன்படுத்த மத்திய அரசு முடிவு

முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், ஏற்கெனவே முனைவர் பட்டம் (பி.ஹெச்டி.) பெற்றவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து முறைகேடு செய்வதைத் தடுப்பதற்காக, "டர்னிடின்' (TURNITIN) என்ற கணினி மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 இந்தத் தகவலை, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
 மகாராஷ்டிர மாநிலம், ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு வந்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
 முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களில் சிலர், ஏற்கெனவே பட்டம் பெற்றவர்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து முறைகேடு செய்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன.
 இந்த முறைகேடுகளைத் தடுப்பதற்கு, டர்னிடின் என்ற கணினி மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளோம்.
 அந்த மென்பொருளில் ஏற்கெனவே பட்டம் பெற்றவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். புதிதாக ஒருவர் ஆய்வுக் கட்டுரையை அந்த மென்பொருளில் உள்ளீடு செய்யும்போது, ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கட்டுரைகளுடன் ஒப்பிட்டு, முறைகேடு நடைபெற்றுள்ளதா? இல்லையா? என்பதை அந்த மென்பொருள் தெரிவிக்கும். இனிவரும் காலங்களில், ஆய்வுக் கட்டுரைகளை சரிபார்ப்பதற்கு இந்த மென்பொருள் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
 சாய்பாபா அறக்கட்டளை சார்பில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு எப்போது அனுமதி கிடைக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ""அறக்கட்டளையிடம் இருந்து விண்ணப்பம் கிடைத்தவுடன், இதுதொடர்பாக, இந்திய மருத்துவ சங்கத்திடமும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்துவேன்'' என்று ஜாவடேகர் பதிலளித்தார்.
 அலோபதி மருத்துவத் துறையில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ""மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்ய, நாடு முழுவதும் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன'' என்று ஜாவடேகர் பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com