548 பேரிடம் எடுக்கப்பட்ட 'உலகளாவிய' கருத்துக்கணிப்பு! தாம்ஸன் ராய்டர்ஸிடம் விளக்கம் கேட்ட மத்திய அரசு

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தாம்ஸன் ராய்டர்ஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிகள் குறித்து மத்திய அரசு கேள்வியெழுப்பியுள்ளது.
548 பேரிடம் எடுக்கப்பட்ட 'உலகளாவிய' கருத்துக்கணிப்பு! தாம்ஸன் ராய்டர்ஸிடம் விளக்கம் கேட்ட மத்திய அரசு

உலகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தாம்ஸன் ராய்டர்ஸ் எனப்படும் தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆன்லைன் மற்றும் தொலைபேசி வழியாக மார்ச் 26-ந் தேதி முதல் மே 4-ந் தேதி வரை ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா மற்றும் பசிஃபிக் பகுதிகளில் இருந்து சுமார் 548 பேரிடம் இந்த உலகளாவிய கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.

அதில் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ள 193 நாடுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பொருளாதார நிலை, சுகாதாரம், கடத்தல் உள்ளிட்ட மோசமான செயல்கள் அதிகம் உள்ள 5 நாடுகள் குறித்து தெரிவிக்குமாறு இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இதில், இந்தியா, ஆப்கானிஸ்தான், காங்கோ குடியரசு, பாகிஸ்தான், சோமாலியா ஆகிய நாடுகள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகம் உள்ள நாடுகளாக அந்த 548 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவனம் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது.

இந்நிலையில், பெண்கள் பாதுகாப்பில் இந்தியா குறித்து தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவனம் தவறான கருத்துக்கணிப்பு முடிவினை வெளியிட்டுள்ளதாகவும், கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்த முழுமையான விவரங்களை தெரிவிக்குமாறு மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தாம்ஸன் ராய்டர்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற கருத்துக்கணிப்பு முடிவகள் தவறானது. இது முழுக்க இந்தியாவின் நிலை குறித்து தெரியாத நபர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற கருத்துக்கணிப்பு முடிவுகளாகும். மேலும் இந்த கருத்துக்கணிப்பு நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்த முழு நம்பகத்தன்மையை வெளியிட வேண்டும். ஏனெனில் முற்றிலும் முரணான வகையில் தான் அவர்கள் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர்.

மேலும் இந்த கருத்துக்கணிப்பு முழுவதும் வெறும் 6 கேள்விகளை மட்டும் கொண்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் எந்த விதமான தரவுகளிலிருந்தும் விவரங்கள் பெறப்படவில்லை. அவை அனைத்தும் அவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றமாதிரி அமைத்துள்ளனர். இதில் கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் எனப்படும் அந்த 548 பேர் குறித்து எவ்வித விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை.

தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட வழிமுறைகளும், 'கொள்கை வகுப்பாளர்கள்' பதிலளிப்பவர்களில் ஒருவராகவும் உள்ளனர். ஆனால் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுவதற்கு முன்பாக இதுகுறித்து இந்திய அரசிடம் இருந்து எந்த விவரங்களும் பெறப்படவில்லை. 

உலகில் உள்ள இதர நாடுகளை விட பெண்களின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்தியா நல்ல நிலையில் உள்ளது. எனவே இதில் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்ஸன் ராய்டர்ஸ் முடிவில் துல்லிய புள்ளிவிவரங்கள் கிடையாது என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. 

குறிப்பாக ஒவ்வொரு நாட்டிலும் பெண்களின் திருமண வயது மாறுபடும். மேலும் குழந்தைத் திருமண வயது நிர்ணயம் தொடர்பான சட்டமும் வேறுபடும். மேலும் சில பகுதிகளில் பின்பற்றப்படும் பெண் உருச்சிதைவு போன்ற செயல்கள் இந்தியாவில் கடும் தண்டனைக்குரியது.

இந்தியாவில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றை திசை திருப்பும் நோக்கதுடன் தான் இதுபோன்ற தவறான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு தேசத்தின் மான்பை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நாடுகளில் பொது இடங்களில் பேசக்கூட பெண்களுக்கு தடை உள்ளது. இதுபோன்ற தவறான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் பரப்பப்படுவது என்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com