நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கறுப்பு பணம், ஊழல் விவகாரங்களை கையிலெடுக்கும் காங்கிரஸ்

வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பாஜகவுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி கறுப்பு பணம் மற்றும் ஊழல் விவகாரங்களை கையில் எடுக்க திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர்: கறுப்பு பணம், ஊழல் விவகாரங்களை கையிலெடுக்கும் காங்கிரஸ்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

அதற்கு முன்னதாக தற்போது சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பண முதலீடு கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்தது. 

இதற்கு மத்திய அரசு பதிலளித்த போதும் காங்கிரஸ் அதை விட்டபாடில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், மோடி கறுப்பு பணம் குறித்து 2014-இல் அளித்த வாக்குறுதி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பேசியது உள்ளிட்டவற்றை குறித்து விமரிசித்துள்ளார். 

மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகப் பெரிய சரிவை கண்டுள்ளது. அதனால், காங்கிரஸ் வரும் கூட்டத்தொடரில் நிச்சயம் பொருளாதார விவகாரங்களை கையில் எடுக்க உள்ளது. 

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆர்பிஎன் சிங் கூறுகையில்,

"மழைக்கால கூட்டத்தொடரில் கறுப்பு பணம் மற்றும் ஊழல் குறித்து விவாதங்களை எழுப்ப உள்ளோம். இந்த விவகாரங்களை வீதிகளுக்கும் கொண்டு செல்வோம். எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஊழல் என்றும் அதன் தலைவர்கள் வெளிநாடுகளில் பணத்தை முதலீடு செய்துள்ளனர் என்றும் சாயம் பூசினார். ஆனால், தற்போது உண்மை வெளியாகிவிட்டது" என்றார்.   

முன்னதாக, வரும் மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிடம் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் கோயல் கோரிக்கை வைத்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com