கருத்துக்கு மன்னிப்புக் கேட்டு விட்டு பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு வாங்க: ஜனாதிபதிக்கு மாணவர்கள் அமைப்பு 'செக்'! 

பிற மதங்களைப் பற்றிய தன்னுடைய கருத்துக்கு மன்னிப்புத் தெரிவித்து விட்டு பின்னர் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக.... 
கருத்துக்கு மன்னிப்புக் கேட்டு விட்டு பட்டமளிப்பு நிகழ்ச்சிக்கு வாங்க: ஜனாதிபதிக்கு மாணவர்கள் அமைப்பு 'செக்'! 

அலிகார்: பிற மதங்களைப் பற்றிய தன்னுடைய கருத்துக்கு மன்னிப்புத் தெரிவித்து விட்டு பின்னர் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2010-ம் ஆண்டு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரங்காநாத் மிஸ்ரா தலைமையிலான கமிஷன், இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் எஸ்.சி பிரிவில் சேர்க்க பரிந்துரைத்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளராக இருந்த ராம்நாத் கோவிந்த் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அப்போது அவர், 'இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் இந்தியாவுக்கு வெளியேயிருந்து வந்தவர்கள்' எனத் தெரிவித்தார். அத்துடன் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை ஏற்பது என்பது சாத்தியமில்லாதது என்றும், இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மார்ச் 7-ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்னும் தகவல் வெளியானது.

இதற்கு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிற மதங்களைப்  பற்றிய தன்னுடைய கருத்துக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் துணை தலைவர் சஜ்ஜத் சுபான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதலில் தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவர் அலிகார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அவருடைய கருத்துக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

எனவே, இங்கு ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நேரிட்டால் அதற்கு ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர்தான் பொறுப்பாக வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com