இந்தியாவும் சீனாவும் இணைந்து செயலாற்ற வேண்டும்: சீன வெளியுறவுத் துறை அமைச்சர்

இந்தியாவும் சீனாவும் கருத்து வேறுபாடுகளைக் கைவிட்டு இணைந்து செயல்பட வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ வலியுறுத்தினார்.
இந்தியாவும் சீனாவும் இணைந்து செயலாற்ற வேண்டும்: சீன வெளியுறவுத் துறை அமைச்சர்

இந்தியாவும் சீனாவும் கருத்து வேறுபாடுகளைக் கைவிட்டு இணைந்து செயல்பட வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ வலியுறுத்தினார்.
டோக்காலாம் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்னைகள் காரணமாக கடந்த ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டன. அவற்றில், சீனா-பாகிஸ்தான் இடையிலான பொருளாதார வழித்தடத் திட்டம், ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை ஐ.நா.வின் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் முயற்சிகளையும், அணுசக்தி விநியோக நாடுகள் (என்எஸ்ஜி) கூட்டமைப்பில் சேர இந்தியா மேற்கொண்ட முயற்சிகளையும் சீனா தடுத்தது ஆகிய பிரச்னைகள் அடங்கும்.
இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு இடையே பெய்ஜிங்கில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் கடந்த ஆண்டில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்ட பிறகு, இந்தியாவுடனான உறவுகள் குறித்து சீனாவின் பார்வை என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்து வாங் யீ கூறியதாவது:
சில சோதனைகளும் சிரமங்களும் இருந்தபோதிலுமம் இந்திய-சீன உறவுகள் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றன. இரு நாடுகளும் கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து பணியாற்ற வேண்டும்.
சீனா தனது உரிமைகளையும் சட்டபூர்வமான நலன்களையும் நிலைநாட்டுவதோடு இந்தியாவுடனான உறவுகளைப் பேணவும் அக்கறை கொண்டுள்ளது. நமது உறவுகளின் எதிர்காலத்துக்காக இந்திய, சீனத் தலைவர்கள் லட்சிய நோக்கை உருவாக்கியுள்ளனர். சீன டிராகனும் இந்திய யானையும் ஒன்றுடன் ஒன்று சண்டையிடாமல், இணைந்து நடனமாட வேண்டும்.
இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்படும்போது, ஒன்றுடன் ஒன்றுடன் சேர்ந்தால் இரண்டு என்பது மாறி ஒன்றுடன் ஒன்று சேர்ந்தால் பதினொன்று என்ற வலுவான நிலை தோன்றும். சர்வதேச நிலைமையானது இந்த நூற்றாண்டில் பெரிய மாற்றத்தை தற்போது கண்டு வருகிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியாவும் சீனாவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இரு நாடுகளும் ஒன்றையொன்று ஆதரிப்பதோடு பரஸ்பர சந்தேகங்களையும் தவிர்க்க வேண்டும்.
இந்திய-சீன உறவுகளில் பரஸ்பர நம்பிக்கைதான் மிக முக்கியமான அம்சமாகும். அரசியல் ரீதியிலான நம்பிக்கை ஏற்பட்டால், இரு நாடுகளுக்கும் இடையில் நட்பு சார்ந்த பரிமாற்றங்களை இமய மலையால் கூட தடுக்க முடியாது.
இரு தரப்பாலும் பகிர்ந்து கொள்ளப்படும் புரிதலானது, கருத்து வேறுபாடுகளை அகற்றி விடும். நமது பார்பரியமான நட்பை முன்னெடுத்துச்செல்லவும், இந்திய மக்களுடன் நண்பனாக இருக்கவும் சீனா தயார்.
சீனாவின் ஒரே பாதை திட்டத்தை இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உருவாக்கியுள்ள இந்திய-பசிஃபிக் உத்தி பாதிக்குமா? என்று கேட்கிறீர்கள். தாங்கள் எந்த நாட்டையும் குறிவைக்கவில்லை என்று இந்த நாடுகள் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com