காவிரி: இன்று 4 மாநில அதிகாரிகள் கூட்டம்: தமிழக அதிகாரிகள் தில்லியில் முகாம்

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வழி வகைகள் குறித்து ஆராய, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலப் பிரதிநிதிகள் பங்கேற்கும்

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வழி வகைகள் குறித்து ஆராய, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலப் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 9) நடைபெறுகிறது. 
மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இக்கூட்டத்தில், தமிழகம் கர்நாடகம் தவிர கேரளம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சமாக 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பதாகும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்ப காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு அழைப்பு: அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானங்களை பிரதமரிடம் நேரில் அளிக்க தமிழக அரசின் சார்பில் நேரம் கோரப்பட்டது. ஆனால், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில், நான்கு மாநில அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை அழைப்பு விடுத்தது.
அதிகாரிகள் தில்லியில் முகாம்: இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப் பணித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் கலந்து கொள்வர் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் வியாழக்கிழமை மாலை விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் நான்கு மாநில அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொருத்து தமிழக அரசு அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விவாதிக்க கர்நாடகம் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் பெங்களூருவில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சிலை விவகாரம்: தலைமைச் செயலருடன், பொதுத் துறை செயலர் செந்தில்குமார், உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி ஆகியோரும் தில்லி சென்றுள்ளனர். காவிரி விவகாரத்தில் அவர்கள் பங்கேற்காத சூழ்நிலையில், தமிழகத்தில் பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் அளிப்பதற்காக அவர்கள் சென்றிருக்க வாய்ப்பு இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
பெரியார் சிலை விவகாரம், அதைத் தொடர்ந்து தமிழகத்தில் எழுந்த நிலைமைகள் குறித்த அறிக்கை ஏற்கெனவே தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், தில்லி சென்றுள்ள உள்துறை, பொதுத் துறை செயலர்கள் அந்த அறிக்கையை மத்திய உள்துறையிடம் வழங்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com