காவிரி தீர்ப்பு: சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தபின் அடுத்த கட்ட நடவடிக்கை: கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காவிரி தீர்ப்பு: சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தபின் அடுத்த கட்ட நடவடிக்கை: கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே நிலவும் காவிரி ஆற்றுநீர்ப் பங்கீடு தொடர்பாக நீதிபதி சித்ததோஷ் முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட நடுவர் மன்ற 1991-இல் தனது இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க உத்தரவிட்டிருந்தது. 
இவ் வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் 2007-இல் இறுதித் தீர்ப்பில் கர்நாடகம், தமிழகத்துக்கு ஆண்டுக்கு 192 டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம், தமிழகம், கேரள மாநிலங்கள் 2007-இல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இறுதித் தீர்ப்பு: இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம், தனது இறுதித் தீர்ப்பை கடந்த பிப்.16-இல் வெளியிட்டது. அதன்படி தமிழகத்துக்கு கர்நாடகம் ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீருக்குப் பதிலாக 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டது. கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீரை ஒதுக்கியது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த அடுத்த 6 வாரங்களுக்குள் செயல் திட்டத்தை வகுக்கவும் (வாரியம் அல்லது ஆணையம் அல்லது நிர்வாகக்குழு அமைக்க) மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியிருந்தது. 
வரவேற்பு- எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முதல்வர் சித்தராமையா, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, காவிரி பாதுகாப்புக் குழுத் தலைவர் ஜி.மாதே கெளடா, கன்னட அமைப்புகளின் தலைவர்கள் வாட்டாள் நாகராஜ், நாராயண கெளடா ஆகியோர் வரவேற்றனர். இத்தீர்ப்பு கர்நாடகத்திற்கு நியாயம் அளிக்கக் கூடியதல்ல என்று முன்னாள் பிரதமர் தேவெ கெளடா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பெங்களூரு, விதான செளதாவில் வியாழக்கிழமை முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
இக் கூட்டத்தில் நீர்வளத் துறைஅமைச்சர் எம்.பி.பாட்டீல், பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், சட்டத் துறைஅமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் ஏ.மஞ்சு, வீட்டு வசதித் துறை அமைச்சர் எம்.கிருஷ்ணப்பா, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக எம்பி பி.சி.மோகன், மஜத சட்ட மேலவைக் குழு தலைவர் பசவராஜ் ஹோரட்டி, மஜத சட்டப்பேரவைக் குழு துணைத் தலைவர் ஒய்.எஸ்.வி.தத்தா, தலைமைச் செயலாளர் ரத்னபிரபா, காவிரி ஆற்றுப்படுகை மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, மஜத சட்டப்பேரவைக் குழுத் தலைவர் எச்.டி.குமாரசாமி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் சித்தராமையா கூறியது: 
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. தீர்ப்பில் கர்நாடகத்தின் நியாயமான சில கோரிக்கைகளை உச்ச நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக 14.75 டிஎம்சி ஒதுக்கப்பட்டுள்ளது. தீர்ப்பைச் செயல்படுத்த அடுத்த 6 வாரங்களுக்குள் செயல்திட்டம் ( காவிரி மேலாண்மை வாரியம் அல்லது ஆணையம் போன்றது) வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்துக் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மீது மறுசீராய்வு மனுதாக்கல் செய்வதா? வேண்டாமா? என்பது குறித்து ஆராயப்பட்டது. 
காவிரி வழக்கில் கர்நாடக அரசின் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் ஃபாலி நாரிமன் தலைமையிலான சட்ட வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, மாநில அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவெடுக்கலாம் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 
நான்கு மாநில தலைமைச் செயலாளர்களின் கூட்டத்துக்கு வெள்ளிக்கிழமை மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பும் சட்ட வல்லுநர்களின் கருத்து கேட்டறியப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com