ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தைதான் ஒரே தீர்வு: ராகுல் காந்தி

ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தைதான் ஒரே தீர்வு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் அந்நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைவர்களாக உள்ள இந்திய வம்சாவளியினரை வியாழக்கிழமை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
சிங்கப்பூரில் அந்நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைவர்களாக உள்ள இந்திய வம்சாவளியினரை வியாழக்கிழமை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தைதான் ஒரே தீர்வு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள ராகுல் காந்தி, அங்கு கல்வி நிறுவனம் ஒன்றில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் மிக மோசமான பொதுக் கொள்கை தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபோது, ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் இணைப்பை ஏற்படுத்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் சிறப்பான கொள்கை வகுக்கப்பட்டது. அதற்கு முன்பு காஷ்மீர் பல்வேறு பிரச்னைகளால் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 9 ஆண்டுகளாக காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தோம். ஆனால், மத்தியில் பாஜக தலைமையிலான அரசு 2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மோசமான அரசியல் முடிவு எடுக்கப்பட்டது.
அந்த மாநிலத்துக்கு நான் சென்றபோது கண்ணீர் வந்துவிட்டது. தவறான கொள்கையை பாஜக அரசு பின்பற்றி வருகிறது.
சீனாவுடன் அமைதி மற்றும் நல்லுறவை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும். சமூகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், பாஜக அமைதியின்மையை உருவாக்கி வருகிறது. மக்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகிறது. பிரிவினையை ஏற்படுத்துவதன் மூலம் மக்களிடையே எழும் கோபத்தை தேர்தல்களில் தனக்கு சாதகமாக பாஜக பயன்படுத்திக் கொள்கிறது.
சிறுபான்மையினரை பாதுகாத்த காரணத்தால் தேசப் பிதா மகாத்மா காந்தி கொல்லப்பட்டார். காங்கிரஸ் கடந்த 70 ஆண்டுகளாக சிறுபான்மையினரைப் பாதுகாத்து வருகிறது. மக்கள் என்ன உடை உடுத்த வேண்டும்; என்ன உணவு உட்கொள்ள வேண்டும் என்பதை பிறர் தீர்மானிக்கக் கூடாது. அதுபோன்ற இந்தியாவைக் காண காங்கிரஸ் விரும்பவில்லை என்று ராகுல் காந்தி பேசினார்.
முன்னதாக, சிங்கப்பூரில் உள்ள இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவகத்துக்கு ராகுல் காந்தி வியாழக்கிழமை சென்று பார்வையிட்டார். மலேசியாவுக்கும் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com