நாடாளுமன்றத்தில் 4-ஆவது நாளாக தமிழக எம்பிக்கள் அமளி

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தில் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தமிழக எம்பிக்கள்அமளியில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் 4-ஆவது நாளாக தமிழக எம்பிக்கள் அமளி

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தில் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தமிழக எம்பிக்கள்அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு விரைந்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த திங்கள்கிழமை முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாநிலங்களவையில் திமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் இப்பிரச்னைக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை மக்களவை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் கூடியது. சர்வதேச மகளிர் தின உரையை மக்களவைத் தலைவர் வாசித்தார். இதைத் தொடர்ந்து,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோருவது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி அதிமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதேபோன்று, திரிணமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், டி.ஆர்.எஸ். உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் 12 மணிக்கு கூடியதும் அதிமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியைத் தொடர்ந்தனர். இதனால்,அவையை நாள் முழுவதும் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையில்...: மாநிலங்களவை அதன் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு தலைமையில் காலை 11 மணிக்கு கூடியதும் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசுவதற்கு அவைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு அனுமதித்தார். இந்த விவாதம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. அதன் பிறகு, காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தை அதிமுக உறுப்பினர்களும், வேறு விவகாரங்களை பிற கட்சி உறுப்பினர்களும் எழுப்பி அமளியில் ஈடுபட முயன்றனர். 

இதையடுத்து, அவையை பிற்பகல் 2 மணி வரை வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தார். அவை மீண்டும் 2 மணிக்கு மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் கூடியதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை அதிமுக உள்ளிட்ட தமிழக உறுப்பினர்கள் எழுப்பினர். திரிணமூல் காங்கிரஸ், தெலுங்குதேசம் உள்ளிட்ட பிற கட்சிகளின் உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் அவையை நாள் முழுவதும் பி.ஜே. குரியன் ஒத்திவைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com