மஹாராஷ்ட்ரா சட்டப்பேரவையை முற்றுகையிடத் திரண்ட 50 ஆயிரம் விவசாயிகள்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மஹாராஷ்ட்ரா சட்டப்பேரவையை முற்றுகையிட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் புனேயில் இருந்து மும்பைக்கு நடைபயணமாக வந்துள்ளனர்.
மஹாராஷ்ட்ரா சட்டப்பேரவையை முற்றுகையிடத் திரண்ட 50 ஆயிரம் விவசாயிகள்!

மும்பை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மஹாராஷ்ட்ரா சட்டப்பேரவையை முற்றுகையிட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் புனேயில் இருந்து மும்பைக்கு நடைபயணமாக வந்துள்ளனர்.

வேளாண் கடன் தள்ளுபடி, மானியம் அளித்தல், விவசாய சீர்திருத்தங்களுக்கான எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து இந்திய கிசான் சபா என்னும் அமைப்பு விவசாயிகளைத் திரட்டி மாபெரும் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் ஒன்றினை திட்டமிட்டுள்ளது. விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு சிவசேனா கட்சி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற இந்த அமைப்பு நடத்தும் இப்போரட்டத்தில்  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் புனேயில் இருந்து நடைபயணமாக மும்பைக்கு வந்துள்ளனர். ஏறக்குறைய 180 கி.மீ. தொலைவை 5 நாட்களாக நடந்து ஞாயிறு நண்பகலில் மும்பை மாநகரத்தின் தாதர் எல்லையை இந்த பிரமாண்டமான விவசாயிகள் அணியானது வந்து சேர்ந்துள்ளது.

முதலில் புனே நகரில் புறப்படும்போது, 30 ஆயிரம் விவசாயிகளாக இருந்த நிலையில், மும்பைக்கு வந்தபோது, 50 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. பிரம்மாண்ட வரிசையில் விவசாயிகள் மும்பை நகருக்குள் வந்துள்ளதால் நாளை நகரம் மூச்சுத் திணறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் அனைவரும் திங்களன்று மாநில சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர். இதன் காரணமாக மும்பை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிடக்கூடாது என்பதற்காக போலீஸார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும், விரிவான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com