கார்த்தி சிதம்பரம் கைதுத் தடைக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு! 

கார்த்தி சிதம்பரத்தினை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றினை செவ்வாயன்று தாக்கல் செய்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் கைதுத் தடைக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு! 

புதுதில்லி: கார்த்தி சிதம்பரத்தினை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றினை செவ்வாயன்று தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டார்; இதற்காக அவருடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா ரூ.35 கோடியை கைமாறாக அளித்தது என்றும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இதில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தை புதிய ஆதாரமாகக் கொண்டு, கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இதே விவகாரத்தில் நடைபெற்ற கருப்புப் பண முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

அதே சமயம் தனக்கு சம்மன்கள் அனுப்பி விசாரிப்பதில் அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை மீறிச் செயல்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் கடந்த திங்களன்று (5-ஆம் தேதி) புதிய மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் அமலாக்கத்துறை அதற்கு உரிய அதிகாரங்களை மீறி தனக்கு சம்மன்கள் அனுப்பி விசாரிக்கிறது என்றும், எனவே அமலாக்கத்துறையின் சம்மன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கானது மறுநாள் செவ்வாயன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கைப்படி எந்த இடைக்கால நிவாரணமும் கிடையாது என்று தெரிவித்த நீதிமன்றம், வழக்கை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கானது வியாழனன்று (8-ஆம் தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் இந்த மனுவை தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தற்காலிக தீர்வை பெறலாம் என நீதிபதிகள் கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினர். உடனடியாக அன்றே மனுவை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மனுதாரரின் அவசரம் கருதி மனுவை வெள்ளியன்றே விசாரிக்க கோரிக்கை வைக்கலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி கார்த்தி தாக்கல் செய்த வழக்கானது தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளியன்று (9- ஆம் தேதி)   விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 20-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு, அமலாக்கத் துறை ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தினை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றினை செவ்வாயன்று தாக்கல் செய்துள்ளது.

அமலாக்கத்துறை தனது மனுவில் கார்த்தி சிதம்பரத்திற்கு நீதிமன்றம் நிவாரணம் அளித்திருக்க கூடாது என்றும், இது நீரவ் மோடி போன்ற குற்றவாளிகளுக்கு விசாரணை ஆணையங்களின் கேள்வி அல்லது விசாரணையில் இருந்து தப்புவதற்கு ஒரு சட்ட வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளது. 

முன்னதாக ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் தற்பொழுது தில்லி திகார் சிறையில் உள்ளார். அதே சமயம் உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவினை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கானது வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com