குறைந்தபட்ச இருப்பு: கடும் விமரிசனத்தைத் தொடர்ந்து அபராதக் கட்டணத்தைக் குறைத்தது எஸ்பிஐ

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையை 75% அளவுக்குக் குறைத்துள்ளது எஸ்பிஐ வங்கி.
குறைந்தபட்ச இருப்பு: கடும் விமரிசனத்தைத் தொடர்ந்து அபராதக் கட்டணத்தைக் குறைத்தது எஸ்பிஐ


புது தில்லி: வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையை 75% அளவுக்குக் குறைத்துள்ளது எஸ்பிஐ வங்கி.

குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் பல்வேறு நிபுணர்களிடம் இருந்து பெற்ற பரிந்துரைகளை ஏற்று, அபராதத்தைக் குறைக்க எஸ்பிஐ வங்கி முன்வந்துள்ளது. புதிய அபராதக் கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் சுமார் 25 கோடி வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள்.

அதாவது, மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்திருப்போர் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவில்லை என்றால் மாதந்தோறும் அபராதமாக ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இது ரூ.15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும்.

இதே போல, நகர எல்லை மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் இருக்கும் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காவிட்டால், மாதந்தோறும் ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.12 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.10 ஜிஎஸ்டி வரியாக வசூலிக்கப்படும்.

குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வங்கிக் கணக்குகளில் இருந்து அபராதம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்து 8 மாதங்களில் எஸ்பிஐ வங்கி, ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் இருந்து அபராதம் என்று கூறி பிடுங்கிய தொகை ரூ.1,771 கோடி என்று செய்திகள் வெளியாகின. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது.

எஸ்பிஐ வங்கியின் ஜூலை - செப்டம்பர் மாத காலாண்டின் நிகர லாபமே ரூ.1,581.55 கோடிதான். நிகர லாபத்தை விட, ஏழை மக்களிடம் இருந்து பிடுங்கிய அபராதம் அதிகம் என்பதால் கடும் விமரிசனத்துக்கும் உள்ளானது. இதையடுத்தே, அபராதத் தொகையைக் குறைக்க எஸ்பிஐ முன்வந்துள்ளது.

தற்போது மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் தனது வங்கிக் கணக்கில் மாதந்தோறும் சராசரியாக ரூ.3 ஆயிரத்தை இருப்பாக வைத்திருக்க வேண்டும். அதே போல, நகர எல்லை மற்றும் ஊரகப் பகுதிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் மாதந்தோறும் சராசரியாக ரூ.2 ஆயிரத்தையும், கிராமப் பகுதிகளில் இருக்கும் வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் ரூ.ஆயிரத்தை குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com