இஷ்ரத் ஜஹான் வழக்கில் மோடி விசாரிக்கப்பட்டார்: முன்னாள் டிஐஜி தகவல்

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது என அந்த மாநில முன்னாள் டிஜிபி வன்சாரா

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது என அந்த மாநில முன்னாள் டிஜிபி வன்சாரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அனைத்தும் புனையப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் கடந்த 2004 ஆண்டில் மும்பையைச் சேர்ந்த இளம்பெண்இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர், காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இவர்கள் லஷ்கர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், நரேந்திர மோடியை கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது போலி என்கவுன்ட்டர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, ஆமதாபாத் நகர குற்றத் தடுப்பு பிரிவின் அப்போதைய தலைவரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான பி.பி.பாண்டே, டிஜிபி வன்சாரா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் 7 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. 
இந்நிலையில், இஷ்ரத் ஜஹான் உள்பட 4 பேரையும் கடத்தி கொலை செய்ததாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று கூறி, சிறப்பு நீதிமன்றத்தில் வன்சாரா மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கில் இருந்து தம்மை விடுவித்து உத்தரவிடுமாறும் அதில் அவர் வலியுறுத்தியுள்ளார். அந்த மனுவில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:
இஷ்ரத் ஜஹான் வழக்கில் அப்போதைய முதல்வர் மோடியை அதிகாரிகள் ரகசியமாக விசாரித்தனர். ஆனால், அதுதொடர்பான தகவல்களோ, விவரங்களோ ஆவணங்களில் இல்லை. மாறாக, தவறான தகவல்களே இடம்பெற்றிருந்தன. அதன் அடிப்படையிலேயே சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதிலிருந்தே அது புனையப்பட்ட ஒன்று என்பது தெளிவாகிறது.
எனவே, இந்த வழக்கில் இருந்து என்னை (வன்சாரா) விடுவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இந்த வழக்கிலிருந்து குஜராத் மாநில முன்னாள் டிஜிபி பி.பி.பாண்டேவை விடுவித்து, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com