காசநோய் ஒழிப்பு பிரசார இயக்கம்: மோடி தொடங்கி வைத்தார்

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
'காசநோய் இல்லாத இந்தியா' பிரசார இயக்கத்தை தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி. உடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா (இடது)
'காசநோய் இல்லாத இந்தியா' பிரசார இயக்கத்தை தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி. உடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா (இடது)

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை காசநோய் ஒழிப்பு பிரசார இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 'காசநோய்க்கு முடிவு' என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் அவர் பேசியதாவது:
சர்வதேச அளவில் 2030-ஆம் ஆண்டுக்குள் காசநோயை முழுமையாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அந்த நோயை முழுமையாக விரட்ட முடிவு செய்துள்ளோம். 
எந்தப் பிரச்னையிலும் சூழ்நிலைக்கு ஏற்ப நாம் அணுகுமுறையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நோய் ஒழிப்புத் திட்டங்களிலும் இதே வழிமுறையைத்தான் நாம் கையாள வேண்டும். அனைவரும் ஒற்றிணைந்து ஓர் இலக்கை நோக்கிப் பயணித்தால் அதனை அடைவது சிரமமில்லை.
காசநோயை ஒழிப்பதில் மாநில அரசுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன். இந்த பிரசார இயக்கத்தில் அவர்களும் முக்கியப் பங்காற்ற வேண்டும். நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை இது மேம்படுத்தும். காசநோய் ஒழிப்பில் பணியாற்றி வரும் மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காசநோயால் ஏழை, எளிய மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயை நாம் நாட்டில் இருந்து அகற்றினால் ஏராளமான உயிர்கள் பாதுகாக்கப்படும் என்றார் மோடி.
உலக சுகாதார நிறுவனத்துடன் (டபிள்யூ.எச்.ஓ) இணைந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இந்த மாநாட்டை நடத்தியது. சர்வதேச அளவில் கடந்த 2016-ஆம் ஆண்டில் காசநோயால் 17 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஆண்டுதோறும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 27 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். முறையான சிகிச்சை பெற்றால் இதில் இருந்து குணமடையலாம் என்றாலும், மருத்துவ வசதி முழுமையாக கிடைக்காததால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com