கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை: எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை மனு

ஐஎன்எக்ஸ் மீடியா கருப்புப் பண முறைகேடு புகாரில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை: எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை மனு

ஐஎன்எக்ஸ் மீடியா கருப்புப் பண முறைகேடு புகாரில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக அந்நிய முதலீடு பெற்றுத் தந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஏற்கெனவே சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ளார். 
அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து முடித்துவிட்ட நிலையில், வரும் 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. 
இதையடுத்து, தில்லியிலுள்ள திகார் சிறையில் உடனடியாக கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இதே ஐஎன்எஸ் மீடியா முறைகேட்டில் கருப்புப் பணப் பரிவர்த்தனை நடைபெற்றது தொடர்பாக அமலாக்கத் துறை ஒரு வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை கைது செய்ய தடை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். 
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 20-ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று கடந்த 9-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை சார்பில் கோரப்பட்டது. இதையடுத்து, மனுவை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிபதி விலகல்: இதனிடையே, சிபிஐ தொடுத்த வழக்கில் இருந்து ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இருந்து பெண் நீதிபதி இந்தர்மீத் கெளர், செவ்வாய்க்கிழமை விலகினார். எனினும், அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. 
இதையடுத்து, நீதிபதி எஸ்.பி. கர்க் இந்த ஜாமீன் மனுவை விசாரித்தார். இந்த மனுவுக்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், இது தொடர்பான தங்கள் பதிலை வரும் 16-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் அறிக்கையாக சிபிஐ தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 
வழக்கு விசாரணையின்போது கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரம், தாயார் நளினி சிதம்பரம் மற்றும் மூத்த வழக்குரைஞர்கள் தில்லி உயர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் வங்கிக் கணக்கில் ரூ.1.16 கோடி, கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு செப்டம்பரில் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டது. 
இப்போது, அது கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் எழுத்துப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com