ஆந்திரத்துக்கு ரூ.12,476 கோடி சிறப்பு நிதி: மாநிலங்களவையில் அரசு தகவல்

ஆந்திர மாநிலத்துக்கு ரூ.12,476.76 கோடி சிறப்பு நிதி அளிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது

ஆந்திர மாநிலத்துக்கு ரூ.12,476.76 கோடி சிறப்பு நிதி அளிக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதில் ரூ.2,500 கோடி மாநிலத்தின் புதிய தலைநகரை உருவாக்குவதற்காக அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அதிர் தெரிவித்திருப்பது: 
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தை மத்திய அரசும், ஆந்திர அரசும் இணைந்துதான் தயாரித்தது. இதுவரை ஆந்திர மாநிலத்துக்காக ரூ.12,476.76 கோடி நிதியை மத்திய அரசு அளித்துள்ளது. இதில் ரூ.2,500 கோடி புதிய தலைநகரை உருவாக்குவதற்காக அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி கோரி மத்திய அரசுக்கு ஆந்திர அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அவையும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
மாநிலங்களிடையே எந்த பாகுபாடும் காட்டாமல் அந்த மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாயில் 42 சதவீதத்தை அந்தந்த மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என்று 14-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், ஆந்திரத்துக்கு மட்டும் வருவாய் பற்றாக்குறை தொகையான ரூ.22,113 கோடி அடுத்த 5 ஆண்டுகளுக்கு அளிக்க வேண்டும் என்று நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. ஏற்கெனவே, இரு ஆண்டுகளுக்கான இந்த நிதியை மத்திய அரசு அளித்துவிட்டது என்றார் அவர்.
ஆந்திர மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு நிதி போதாது என்றும், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரியும் அந்த மாநில ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி அவை நடவடிக்கைளை முடக்கி வருகின்றனர். 
இதே கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரு மத்திய அமைச்சர்கள் சில நாள்களுக்கு முன்பு பதவி விலகினர். இந்நிலையில், ஆந்திரத்துக்கு அளிக்கப்பட்டுள்ள நிதி தொடர்பான விவரத்தை மத்திய அரசு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com