இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக மீதான கோபத்தின் வெளிப்பாடு

உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள், பாஜக மீதான மக்களின் கோபத்தை
இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக மீதான கோபத்தின் வெளிப்பாடு

உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள், பாஜக மீதான மக்களின் கோபத்தை வெளிப்படுத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தல் முடிவுகள், பாஜக மீது மக்கள் கொண்டிருக்கும் கோபத்தைக் காட்டுகிறது. அதுவே, பாஜக அல்லாத, வெற்றிபெற வாய்ப்புள்ள எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க வேண்டும் என்ற உந்துதலை வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறோம். அது, ஒரு நாளில் நடந்து விடாது என்று ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முடிவின் தொடக்கம்-மம்தா: உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள், ஒரு கட்சியின் முடிவு தொடங்கி விட்டதைக் காட்டுகிறது என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மாபெரும் வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கும், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கட்சியின் (பாஜக) முடிவின் தொடக்கம் ஆரம்பமாகிவிட்டது. இதேபோல், பிகார் மாநிலத்தில் அராரியா மக்களவைத் தொகுதியிலும், ஜெகநாபாத் சட்டப் பேரவைத் தொகுதியிலும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளதற்கு, அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாதுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒன்றிணைந்து போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று மம்தா பானர்ஜி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, தனக்கு வாழ்த்து தெரிவித்த மம்தா பானர்ஜிக்கு லாலு பிரசாத் நன்றி தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கருத்து: இதனிடையே, இடைத்தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. முகமது சலீம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்திலும், மத்தியிலும் ஆட்சியில் உள்ள பாஜக மீது மக்கள் கொண்டிருக்கும் கோபத்தை வெளிப்படுத்துவதற்கு சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து உதவி செய்துள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் பல ஆண்டுகளாக இரு துருவங்களாக இருந்தாலும், இரு கட்சிகளும் பகைமை மறந்து, ஜனநாயகத்தைக் காப்பதற்கும், பாஜகவை தோற்கடிப்பதற்கும் கை கோத்துள்ளன என்றார் அவர்.
டி.ராஜா கருத்து: இதனிடையே, பாஜக வெல்ல முடியாத ஒரு கட்சி அல்ல என்பதைக் காட்டுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறினார். இந்தத் தேர்தல் முடிவுகள், தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக, மதச் சார்பற்ற, ஜனநாயக சக்திகள் எப்படி வியூகம் வகுக்க வேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com