உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க நாடாளுமன்ற குழு பரிந்துரை

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.
நீதிபதிகள் பணியிடங்களில் நிலவும் பற்றாக்குறையை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும் வகையில், இந்நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சட்டத் துறை இணையமைச்சர் பி.பி. சௌதுரி எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்துள்ளார். அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சட்டம் மற்றும் பணியாளர் நலத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவானது, நீதிமன்றங்களில் அதிக அளவில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு, நீதிபதிகள் பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளது. 
எதிர்காலத்தில் நீதித்துறை பணியிடங்களில் காலியிடம் ஏற்பட்டால், அந்த இடத்தில் கடந்த 1993ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள்படி உடனடியாக ஆள்களை நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
அதேபோல், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65லிருந்து 67ஆகவும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62லிருந்து 65ஆகவும் அதிகரிக்க வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. 
இதுபோல், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் வாயிலாக, ஏற்கெனவே பணியில் இருக்கும் நீதிபதிகளின் சேவை தொடர வழிவகுப்பதுடன், நீதிபதிகள் பணியிடங்களில் காலியிடம் அதிகரிப்பதை கட்டுப்படுத்தவும், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும் முடியும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது என்று அந்தப் பதிலில் சௌதுரி குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பது தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு கடந்த வாரம் தெரிவித்தது.
முன்னதாக, இதுதொடர்பான மசோதாவை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 2010ஆம் ஆண்டில் கொண்டு வந்தது. 
15ஆவது மக்களவையின் பதவிக்காலம் 2014ஆம் ஆண்டில் முடிந்து விட்டதால், அந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அந்த மசோதா காலாவதியாகி விட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com