நீரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் இன்டர்போலிடம் அமலாக்கத் துறை வலியுறுத்தல்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்ட வைர வியாபாரி நீரவ் மோடி
நீரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் இன்டர்போலிடம் அமலாக்கத் துறை வலியுறுத்தல்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்ட வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹூல் சோக்ஸி ஆகியோருக்கு எதிராக 'ரெட் கார்னர் நோட்டீஸ்' வெளியிட வேண்டும் என்று இன்டர்போல் அமைப்பிடம் அமலாக்கத் துறை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
நீரவ் மோடி, சோக்ஸி ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற விசாரணையில் நேரில் ஆஜராகக்கோரி, நீரவ் மோடி, சோக்ஸி ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன்களை அனுப்பியிருந்தது. ஆனால், 2 பேரும் தங்களால் ஆஜராக முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து, அவர்களுக்கு எதிராக மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், 2 பேருக்கு எதிராகவும் பிணையில் வெளிவர முடியாத வாரண்டு உத்தரவை வெளியிட வேண்டும் என அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்திருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், 2 பேருக்கு எதிராகவும் பிணையில் வெளிவர முடியாத வாரண்டை இம்மாத தொடக்கத்தில் பிறப்பித்தது. இந்த வாரண்டு உத்தரவை அடிப்படையாகக் கொண்டு, இன்டர்போல் அமைப்பிடம் 2 பேருக்கு எதிராகவும் ரெட் கார்னர் நோட்டீஸை வெளியிட வேண்டும் என அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் இன்டர்போல் பணிகளை செய்துவரும் சிபிஐயிடம் இக்கோரிக்கையை அமலாக்கத் துறை வலியுறுத்தியுள்ளது. அதில், பிரான்ஸில் உள்ள இன்டர்போல் தலைமையகம் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸை நீரவ் மோடி, சோக்ஸி ஆகியோருக்கு எதிராக வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது' என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது, குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு நபர், வெளிநாட்டுக்குச் சென்று தலைமறைவாகி விடும்பட்சத்தில், அவர் இருக்கும் இடத்தை அறிந்து, கைது நடவடிக்கையை மேற்கொள்ள உதவியாக இருக்கும். இந்த நோட்டீஸ் வெளியிடப்பட்டால், அந்த நபர் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், அவர் இருக்கும் நாட்டிடம் தகவல் தெரிவித்து, கைது செய்து ஒப்படைக்கும்படி இன்டர்போல் கேட்கலாம். அப்படி அவர் கைது செய்யப்பட்டால், வழக்கு நடைபெறும் நாட்டில் இன்டர்போல் அமைப்பால் ஒப்படைக்கப்படுவார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com