முஸ்லிம் திருமணச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

இஸ்லாமிய சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் பலதார மணம், நிக்கா - ஹலாலா (விவாகரத்துப் பெற்ற தம்பதிகள் மீண்டும் சேர்வதில் உள்ள தடைகள்) உள்ளிட்டவை சட்ட விரோத நடவடிக்கைகள்

இஸ்லாமிய சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் பலதார மணம், நிக்கா - ஹலாலா (விவாகரத்துப் பெற்ற தம்பதிகள் மீண்டும் சேர்வதில் உள்ள தடைகள்) உள்ளிட்டவை சட்ட விரோத நடவடிக்கைகள் என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய நடைமுறைகளால் முஸ்லிம் பெண்கள் பாதிப்புக்குள்ளாவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணமான ஆண் ஒருவர் தனது மனைவியிடம் மூன்று முறை தலாக் எனக் கூறி விவாகரத்து செய்யலாம் என்ற நடைமுறை இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து வந்தது. 
ஒவ்வொரு முறை தலாக் கூறும்போதும் குறிப்பிட்ட மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பதும், அந்த காலகட்டத்துக்குள் தம்பதிக்குள் கருத்தொற்றுமை ஏற்பட்டால் சேர்ந்து வாழலாம் என்பதும் இஸ்லாமிய வழக்கம். ஆனால், சமகாலத்தில் அந்த நடைமுறைத் தவறாகக் கையாளப்படுகிறது என்றும், ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி உடனடியாக விவாகரத்து செய்வதாகவும் புகார் எழுந்தது. இதனால் பல இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கை சீர்குலைந்து போவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முத்தலாக் நடைமுறை சட்டவிரோதமானது என்று அதிரடி தீர்ப்பை வெளியிட்டது.
இந்நிலையில், பலதார மணம், நிக்கா ஹலாலா ஆகிய நடைமுறைகளும் பெண்களுக்கு எதிரானவை என்று கூறி தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
அத்தகைய நடைமுறைகள் பாலின சமத்துவத்தின் அடிப்படையிலும் இல்லை; இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு உகந்ததாகவும் இல்லை என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே திருமணம் செய்து கொண்ட மனைவி சேர்ந்து வாழும்போதே கணவர் இன்னொரு பெண்ணை மணக்க வாய்ப்பளிக்கும் வழக்கங்கள் பெண்களுக்கு எதிரானவை என்றும், அதனை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விரைவில் அந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com