பெண் மருத்துவரைக் கொன்றது யார்? காவல்துறையின் ஜோடிப்புகளை அவிழ்த்த நீதிமன்றம்

மருத்துவர் சத்யாவின் இறுதி நொடிகள் அவ்வளவு கொடூரமாக இருந்திருக்கின்றன. காப்பர் ஒயரால் கழுத்து நெறிக்கப்பட்டு, கத்தியால் பலமுறை கழுத்தைக் குத்தி பயங்கரமாக அவர் கொலை செய்யப்பட்டார்.
பெண் மருத்துவரைக் கொன்றது யார்? காவல்துறையின் ஜோடிப்புகளை அவிழ்த்த நீதிமன்றம்


சென்னை: மருத்துவர் சத்யாவின் இறுதி நொடிகள் அவ்வளவு கொடூரமாக இருந்திருக்கின்றன. காப்பர் ஒயரால் கழுத்து நெறிக்கப்பட்டு, கத்தியால் பலமுறை கழுத்தைக் குத்தி பயங்கரமாக அவர் கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யும் போது அவர் கூச்சலிடக் கூடாது என்பதற்காக வாயை மூட முயற்சித்ததில் முகம் முழுக்க நகக் கீறல்கள். 

கீழ்ப்பாக்கம் கும்மாளம்மன் கோயில் தெருவில் உள்ள குடியிருப்பின் 2வது தளத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி மருத்துவர் சத்யா கொலை செய்யப்பட்டார்.

அன்று மாலை 3 மணிக்கு அவர் தங்கியிருந்த அறையில் உடன் வசித்து வந்த மருத்துவர் சங்கீதா வீட்டுக்கு வரும் போது ரத்த வெள்ளத்தில் சத்யா சடலமாகக் கிடந்தார், அவரது கழுத்தில் குத்தப்பட்டிருந்த கத்தியோடு.  தற்போது 2018ம் ஆண்டு.. 3 ஆண்டுகள் ஆகியும் அவரைக் கொன்றது யார் என்று தெரியவில்லை.

இந்த கொலையில் குற்றவாளி என்று கைது செய்யப்பட்ட திரிபுராவைச் சேர்ந்த 22 வயதான அரிந்தம் தேப்நாத், 2011ம் ஆண்டு பொறியியல் படிக்க சென்னை வந்து அதே குடியிருப்பில் தங்கியிருந்தார். சத்யாவை பலாத்காரம் செய்ய முயன்று, அவர் தடுத்ததால் தேப்நாத் கொலை செய்ததாக காவல்துறை குற்றம்சாட்டியது.
 

எல்லாவற்றையும் விசாரணை செய்த நீதிமன்றம், 2017ம் ஆண்டு டிசம்பரில், தேப்நாத்தை விடுதலை செய்தது. போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்வதாக அறிவித்தது. அந்த தீர்ப்பின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், குற்றவாளி என்று தேப்நாத்தை முடிவு செய்த காவல்துறை அது தொடர்பாகவே ஆதாரங்களை திரட்டியதும், சம்பவ இடத்தில் செய்ய வேண்டிய எந்த முறையான விசாரணையும் செய்யப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சத்யாவின் கழுத்தில் இருந்த கத்தியில் பதிவான கைரேகையைக் கூட காவல்துறை சமர்ப்பிக்கவில்லை.

குற்றவாளி வெளியே சுதந்திரமாக நடமாட, குற்றம்சாட்டப்பட்ட தேப்நாத் பெயில் கூட கிடைக்காமல் 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார். தற்போது வரை அவர் தனது பொறியியல் படிப்பைக் கூட முடிக்கவில்லை.

கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த குமார் என்பவர் தான் காவல்துறையில் தேப்நாத் பற்றி சொன்னதாகவும், பிறகுதான் குற்றவாளியை காவல்துறையினர் பிடித்ததாகவும் கூறுகிறார்கள்.

ஆகஸ்ட் 24ம் தேதி காவல்துறை பதிவு செய்த அறிக்கை சொல்வது என்னவென்றால், கொலை நடந்த அன்று சரியாக தாழிடப்படாத கதவைப் பயன்படுத்தி தேப்நாத் வீட்டுக்குள் நுழைந்து சத்யாவை பலாத்காரம் செய்ய முயன்றார். அது முடியாததால் வீட்டில் இருந்த வொயர் மற்றும் கத்தியால் கொலை செய்துவிட்டு, அங்கிருந்த மைக்ரோமேக்ஸ் போனை எடுத்துக் கொண்டு தப்பினார்.

தனது வீட்டுக்குச் சென்று ஆடையை மாற்றிக் கொண்டு, செல்போனை ஒரு கடைசில் 1,200க்கு விற்றுள்ளார். அந்த செல்போனும், அதில் இருந்த மெமரி கார்டும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே நாளில் அவரது வீட்டை சோதித்தபோது, ரத்தக் கறை படிந்த ஆடைகளையும் பறிமுதல் செய்ததாகக் கூறுகிறது.

ஆனால், இந்த ஆடையில் இருந்துதான் பிரச்னை தொடங்கியது. அதாவது, அந்த வீட்டுக்குள் ரத்தக் கரை படிந்த ஆடை சம்பவம் நடந்த அன்று முதல் இருந்தது என்றால், மோப்ப நாய் ஏன் அதை விடுத்து, ஈகா தியேட்டர் வரை ஓடியது. கடந்த 4 நாட்களில் அந்த ஆடையை சுத்தப்படுத்தாமலே இருந்தாரா தேப்நாத் என்பதுதான் சந்தேகம்.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், அந்த ரத்தக் கரையை ஆய்வு செய்த தடயவியல் துறை, அந்த ரத்தம் ஒரு ஆணுடையது என்று கூறியிருக்கிறது.

இதற்கெல்லாம் அடுத்தபடியாக 3 நேரடி சாட்சிகளை காவல்துறை நீதிமன்றத்தில் நிறுத்தியது, அந்த வீட்டுக்குள் செல்வதைப் பார்த்ததாக கேபிள் ஆபரேட்டரும், வீட்டில் இருந்து ரத்தக் கரை படிந்த ஆடையோடு வெளியே வருவதைப் பார்த்ததாக தண்ணீர் கேன் போடுபவரும் சாட்சி கூறினர். விசாரணையில் அவர்கள் பிறழ் சாட்சியாக மாறியதால் அவர்கள் நீக்கப்பட்டனர்.

கடைசியாக இருந்த ஒரே ஆயுதம் செல்போன், மெமரி கார்டு, அதிலும் காவல்துறை கோட்டைவிட்டது. அது சத்யா பயன்படுத்திய செல்போன்தான் என்பதை காவல்துறை நிரூபிக்கவில்லை. சரி மெமரி கார்டில் தேப்நாத்தின் புகைப்படம் இருந்ததாகக் கூறுவதை விசாரித்த நீதிமன்றம், அந்த புகைப்படத்தைத் தவிர மெமரி கார்டில் வேறு எதுவுமே இல்லாதது குறித்து கேள்வி எழுப்பினர். சத்யா பயன்படுத்திய செல்போனில் இந்த மெமரி கார்டு இருந்திருந்தால் நிச்சயம் அதில் வேறு சில கோப்புகளும் இருந்திருக்கும். 3 புகைப்படங்கள் மட்டுமே இருந்துள்ளன. இது சத்யாவின் செல்போனில் இருந்ததா? என்பதே சந்தேகத்தை எழுப்புகிறது என்றார்கள். அதிலும், கொலை தொடர்பாக பறிமுதல் செய்த பொருட்களின் பட்டியலில் மெமரி கார்டு இல்லவே இல்லை.

செல்போனில் இந்த மெமரி கார்டு எப்போது இணைக்கப்பட்டது என்ற கேள்விக்கும் காவல்துறையிடம் பதில் இல்லை.

குற்றம்சாட்டப்பட்டவர் அளித்த வாக்குமூல அறிக்கையில் இருக்கும் கையெழுத்து தன்னுடையதுதான் என தேப்நாத் கூறியுள்ளார். ஆனால், அதில்  தேதி மாற்றப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

20 ஆகஸ்டு என்று இருந்தது 24 என மாற்றப்பட்டுள்ளது. இதற்கு நீதிமன்றம், தேப்நாத் சட்டத்துக்கு விரோதமாக 20ம் தேதியில் இருந்தே காவல்துறை விசாரணையில் வைக்கப்பட்டிருந்தாரா என்று கேள்வி எழுப்பியது.

கடைசியாக, காவல்துறை முதலில் தேப்நாத் பற்றி தகவல் சொன்னதாகக் கூறிய குமார், சத்யா மரணம் குறித்து செய்தித்தாள்களில் பார்த்தே அறிந்து கொண்டதாகவும், அப்போதே தேப்நாத் பற்றிய செய்திகள் இருந்ததாகவும் கூறியுள்ளார். இதன் மூலம் குமார், காவல்துறைக்கு தேப்நாத் பற்றி கூறவில்லை என்பது தெளிவாகிறது.

எனவே, இந்த வழக்கில் ஆதி முதல் அந்தம் வரை காவல்துறை மிகப்பெரிய தவறை திரும்ப திரும்ப செய்து சரியாக்கப்பார்த்துள்ளது என்பது தெளிவாகிறது.

குடியிருப்பின் வெளியே ரத்தக் கரை படிந்திருந்ததாக சில சாட்சிகள் கூறியபோது, அது பற்றி காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி அளித்த பதில் அது எனக்குத் தெரியாது என்பதுவாகும்.

ஒரு கொலையில் அங்கிருக்கும் சாட்சியங்களும், கைரேகைகளுமே முக்கிய சாட்சிகள். எந்த விசாரணை அதிகாரியும் அதனை புறந்தள்ளமாட்டார். ஆனால் இங்கே விநோதமாக இங்கே கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட கத்தியைக் கூட காவலர்கள் பறிமுதல் செய்யவில்லை என்பது விசித்திரமாக உள்ளது என்று நீதிபதி கூறினார்.

கொலைச் சம்பவத்தை புகைப்படம் எடுத்த போது அதில் கூட கத்தி இடம்பெற்றிருந்தது. அப்படியிருக்க கத்தியை காவல்துறை ஆய்வாளர் எப்படி கைப்பற்றாமல் விட்டார்? விசாரணை முடிவடையும் வரை, அந்த கத்தி எப்படி காவல்துறையிடம் வராமல் போனது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சத்யாவைக் கொலை செய்தது யார் என்ற கேள்வியோடு, தேப்நாத் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்ததற்கு யார் பொறுப்பு என்ற கேள்வியும் சேர்ந்து கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com