பொதுத்துறை வங்கிகளை கண்காணிக்க முடியாமல் போனதற்கு ஆர்பிஐ சொல்லும் 7 காரணங்கள்

பொதுத் துறை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான வங்கிகளாக பல ஆண்டுகளாக திகழ்கின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா போன்ற வங்கிகளில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் சேமிப்புகளை போட்டு வைத்துள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளை கண்காணிக்க முடியாமல் போனதற்கு ஆர்பிஐ சொல்லும் 7 காரணங்கள்


பொதுத் துறை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான வங்கிகளாக பல ஆண்டுகளாக திகழ்கின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா போன்ற வங்கிகளில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் சேமிப்புகளை போட்டு வைத்துள்ளனர்.

நிரந்தர வைப்பு, சேமிப்புக் கணக்கு போன்றவை தொடங்க தனியார் வங்கிகளை விட ஏராளமான பொதுமக்கள் இதுபோன்ற பொதுத் துறை வங்கிகளையே நாடுகிறார்கள்.

செல்போன் செயலி, பேங்கிங் வசதி என தனியார் வங்கிகள் பல சேவைகளை வழங்கினாலும், நம்பிக்கை என்ற அடிப்படையில் மக்கள் நாடுவது பொதுத்துறை வங்கிகளைத்தான்.

இந்த நிலையில்தான் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடி என்ற செய்தி பல விவாதங்களை எழுப்பியது. வங்கியில் பணியாற்றிய ஊழியர்கள் சிலர் மோசடியில் ஈடுபட்டு நீரவ் மோடி எனும் தொழில் அதிபர் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்க உதவியுள்ளனர். தனியார் வங்கிகளை விட, பொதுத் துறை வங்கிகளில் வாராக்கடன் அதிகம் என்பதும் இதுபோன்ற காரணத்தால்தான் நேரிடுவதுதான் என்றாலும், இது அதையெல்லாம் தாண்டிய மிகப்பெரிய மோசடியாக உள்ளது.

உடனடியாக பொதுத் துறை வங்கியின் மோசடிக்கு மத்திய அரசு, ஆர்பிஐ-யை குற்றம்சாட்டுகிறது. பொதுத் துறை வங்கிகளை உரிய வகையில் கண்காணிக்கத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

நாட்டின் மத்திய வங்கியாக இருக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, வங்கிப் பணியாற்றும் அனைத்து வங்கிகளையும் கண்காணிக்க வேண்டியது அவசியம்தான். தனியார் வங்கிகளை கண்காணிக்க வேண்டிய மிக முக்கியப் பொறுப்பு ஆர்பிஐக்கு உண்டு. ஆனால் அதே சமயம் பொதுத் துறை வங்கிகளை ஆர்பிஐயால் கண்காணிக்க முடியுமா? அதற்கான அதிகாரம் உள்ளதா? 

இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தால்தான் உண்மை நிலை தெரிய வரும்.

இது குறித்து ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேல் கூறுகையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா போன்ற பொதுத் துறை வங்கிகளை கண்காணிப்பது மற்றும் நடவடிக்கை எடுப்பதில் ஆர்பிஐக்கு எந்த அளவுக்கு அதிகாரம் உள்ளது என்பது மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும்.

பொதுத் துறை வங்கிகளை கண்காணிப்பதில் ஆர்பிஐக்கு இருக்கும் 7 முக்கிய சிக்கல்கள் குறித்து அவர் காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

அதன்படி, 
இயக்குநர்களையோ நிர்வாகிகளையோ மாற்ற முடியாது
வங்கி வறைமுறைச் சட்டம் 1949ன் படி, ஆர்பிஐயின் கீழ்தான் அனைத்து வணிக வங்கிகளும் இயங்குகின்றன. ஆனால் இந்த சட்டத்தின்படி பொதுத் துறை வங்கிகளின் இயக்குநர்களையோ, முக்கிய நிர்வாகிகளையோ மாற்றும் அதிகாரத்தை ஆர்பிஐக்கு அளிக்கவில்லை. அதாவது, பொதுத் துறை வங்கிகள் ஆர்பிஐ அளிக்கும் உத்தரவை விட, மத்திய அரசு அளிக்கும் உத்தரவைத்தான் மதிக்கும்.

வங்கிகளில் நடக்கும் முறைகேட்டுக்கு யார் பொறுப்பு?
ஒரு வங்கியில் நடக்கும் முறைகேடுகளுக்கு ஆர்பிஐ பொறுப்பாகிறது. ஆனால் அதே சமயம், வங்கி வறைமுறைச் சட்டத்தில், பொதுத்துறை வங்கிகளின் முறைகேடுகளுக்கு ஆர்பிஐ பொறுப்பாகாது என்கிறது ஒரு விதிமுறை.

நிர்வாகி அல்லது மேலாளரை நீக்க முடியாது
தனியார் வங்கிகளைப் போல பொதுத் துறை வங்கிகளின் நிர்வாகியையோ அல்லது பொது மேலாளரையோ ஆர்பிஐ-யால் நீக்க முடியாது.

வங்கி இணைப்புக்கு வலியுறுத்த முடியாது
நிதிநிலையைக் காரணம் காட்டி எந்த வங்கியையும் இணைக்கும்படி ஆர்பிஐ-யால் வலியுறுத்த முடியாது. இதுவே தனியார் வங்கிகளை ஆர்பிஐ-ஆல் ஒன்றிணைக்க முடியும். அதே சமயம், பொதுத் துறைகளை ஒன்றிணைப்பதாக இருந்தால் அது மத்திய அரசால் மட்டுமே முடியும்.

வங்கி நடவடிக்கைகளுக்க எந்த உரிமமும் தேவையில்லை
வங்கி வறைமுறைச் சட்டத்தின் 21வது பிரிவின்படி, பொதுத் துறை வங்கிகள் தங்கள் சேவைக்காக எந்த உரிமமும் பெறத்தேவையில்லை. 

வங்கியை கலைத்தல்
எந்த ஒரு வங்கியையும் கலைக்கும் அதிகாரம் ஆர்பிஐக்கு இல்லை. ஒரு தனியார் வங்கி திவால் அல்லது சிக்கலில் இருக்கும் போது அதனை கலைக்கும் அதிகாரம் இருப்பதை போல, ஒரு பொதுத் துறை வங்கியை கலைக்கும் அதிகாரம் இல்லை.

தனித்தனி அதிகாரம்
அனைத்து வங்கிகளிலும் நிர்வாகி மற்றும் மேலாளர் என இரண்டு பதவிகள் இருக்க வேண்டும் என்பதை ஆர்பிஐ வலியுறுத்துகிறது. ஆனால் இதனை பொதுத் துறை வங்கிகளுக்கு கட்டாயமாக்கமுடியாது. அங்கு ஒரே ஒரு பதவி இருக்கும். அந்த ஒரே நபர் தனக்குத்தானே விளக்கம் அளித்துக் கொள்ளும் நிலையே உள்ளது என்று கூறியுள்ளார்.

ஆர்பிஐ ஆளுநரின் இந்த விளக்கத்தைப் பொறுத்தவரை, பொதுத் துறை வங்கிகளில் நடக்கும் எந்த மோசடிக்கும் மத்திய அரசே பொறுப்பு என்பது தெரிகிறது. வங்கி மோசடியில் ஆர்பிஐ காட்டியிருக்கும் சிகப்புக் கொடியாக இது பார்க்கப்படுகிறது. மோசடிகள் இல்லாமல் நிர்வாகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், அனைத்து பொதுத் துறை வங்கிகளும் ஆர்பிஐயின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டியது மிகவும் முக்கியம்.

இன்னும் மிகப் பெரிய மோசடி நடந்து அது வெளிச்சத்துக்கு வரும்முன் மத்திய அரசு இது தொடர்பான நடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com