நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறும் வரை அவைகளை முடக்காதீர்: ஜெகன் மோகன் கோரிக்கை

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறும் வரை இரு அவைகளையும் முடக்க வேண்டாம் என்று ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை வைத்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறும் வரை அவைகளை முடக்காதீர்: ஜெகன் மோகன் கோரிக்கை

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம் வழங்குவது தொடர்பாக அம்மாநில கட்சிகளின் தரப்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக ஆந்திராவைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.

மேலும் மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அக்கட்சித் தரப்பிலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன. இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

சிறப்பு அந்தஸ்து மட்டுமே ஆந்திராவுக்கு மறுவாழ்வு அளிக்கும். எனவே நாங்கள் தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான நடவடிக்கையை தொடர்ந்து செயல்படுத்த இதர கட்சிகள் அனைத்தும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்கள் அனைவரின் கோரிக்கையும் நியாயமானது.

இருப்பினும் இந்த தீர்மானம் நிறைவேறும் வரை இரு அவைகளையும் முடக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்விவகாரத்தில் இருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பின்வாங்கப்போவதில்லை. எனவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான நடவடிக்கையை சபாநாயகர் பரிசீலனைச் செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com