பாஜக, காங்கிரஸ் இல்லாத கூட்டாட்சி முன்னணி: மம்தாவுடன் ஆலோசித்த பிறகு கே.சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத கூட்டாட்சி முன்னணி (மூன்றாவது அணி) அமைக்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
கொல்கத்தாவில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத கூட்டாட்சி முன்னணி (மூன்றாவது அணி) அமைக்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய பிறகு இதனை சந்திரசேகர் ராவ் பத்திரிகையாளர்களிடம் கூறினார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய அளவில் மூன்றாவது அணிக்கு முயற்சி தொடங்கியுள்ளது.
மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகத்தில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பிறகு மம்தா பானர்ஜி, சந்திர சேகர் ராவ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது சந்திரசேகர் ராவ் கூறியதாவது: 'இந்த சந்திப்பு நல்ல தொடக்கமாகும். நமது நாட்டுக்கு மாற்று அரசியல் சக்தியும், மாற்று அரசியல் கொள்கையும் தேவைப்படுகிறது. நாட்டு மக்கள் நல்ல விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். அடுத்த ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சிக்கு வந்தால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? பெரிய மாற்றம் எதையும் அவர்கள் ஏற்படுத்த மாட்டார்கள். எனவே, ஒத்த கொள்கையுடைய கட்சிகளுடன் நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம். இந்த கூட்டாட்சி முன்னணி, மக்களுக்கான முன்ணியாக இருக்கும். 
இந்த கூட்டாட்சி முன்னணியில் ஒருமித்த கருத்து அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணியின் தலைவர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
செய்தியாளர்களிடம் மம்தா கூறுகையில், 'அரசியலில் சில சூழ்நிலைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நாங்கள் வலுவான முன்னணியாக இருக்க விரும்புகிறோம். எனவே, எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்கப்பட மாட்டாது. சந்திரசேகர் ராவ் கூறியதை நான் முழுமையாக ஏற்கிறேன். ஒரு கட்சி ஆட்சி அமைத்து அவர்கள் தங்கள் விருப்பப்படி ஆட்சி நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு பிராந்திய கட்சிக்கும் அவர்கள் இடத்தில் செல்வாக்கு உண்டு. இதை இணைத்தால் தேசிய அளவில் வலுவாக இருக்கும். அப்போது, ஒவ்வொருவரும் மற்றொருவரை மதித்து நடக்கும் சூழ்நிலை உருவாகும். அடுத்து எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், அதை அனைவருக்கும் தெரிவிப்போம்' என்றார்.
முன்னதாக, 'பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத கூட்டணி நமது நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும். தேசிய அரசியலில் நல்லதொரு மாற்றம் வேண்டும்' என்று அண்மையில் சந்திரசேகர ராவ் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
பாஜக மீது அதிருப்தியில் உள்ள சிவசேனை, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளையும், திமுக உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகளையும் இக்கூட்டணியில் சேர்க்க அடுத்த கட்டமாக முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com