இராக்கில் 39 இந்தியர்களின் இறப்பு அதிர்ச்சியளிக்கிறது: அமரீந்தர் சிங்

'இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 39 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள தகவல் நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்' என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.
இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் பஞ்சாபைச் சேர்ந்த ஹர்சிம்ரன் சிங் கொல்லப்பட்டதை அறிந்து, கதறி அழும் போவால் கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினர். நாள்: செவ்வாய்க்கிழமை.
இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் பஞ்சாபைச் சேர்ந்த ஹர்சிம்ரன் சிங் கொல்லப்பட்டதை அறிந்து, கதறி அழும் போவால் கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினர். நாள்: செவ்வாய்க்கிழமை.

'இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 39 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள தகவல் நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்' என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இராக்கில் காணாமல் போன இந்தியர்கள் 39 பேர் (அவர்களில் பலரும் பஞ்சாபியர்கள்) இறந்து விட்டதாக அமைச்சர் சுஷ்மா வெளியிட்ட தகவலால் அதிர்ச்சியில் உறைந்து போனேன். கடந்த 2014இல் இருந்து நம்பிக்கையுடன் காத்திருந்த அவர்களின் குடும்பத்தாருக்காக என் இதயம் துடிக்கிறது. மறைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில் 'தங்களுக்குப் பிரியாமானவர்கள் திரும்பி வருவார்கள் என்று காத்திருந்த சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்களுடன் இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார். 
'அக்கறையற்ற மத்திய அரசு': காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில் 'இந்த விவகாரத்தில் அக்கறையின்மையின் எல்லையை மோடி அரசு தொட்டுள்ளது. கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் உயிருடன் இருப்பதாக மத்திய அரசு இதுவரை கூறிவந்தது. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கலையும் இந்த நாட்டையும் மோடி அரசு தவறாக வழிநடத்தியது ஏன்? என்பதே கேள்வி. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனித்தனியாக தகவல் தெரிவிக்காமல் ஒட்டுமொத்தமாக சுஷ்மாவின் பேச்சை தொலைக்காட்சியில் காண்பித்து தகவல் கூறுகின்றனர். இறந்த இந்தியர்களுக்கு கௌரவமான முறையில் இறுதிச்சடங்கு மேற்கொள்ளவும், அவர்களின் குடும்பத்தாருக்கு போதுமான இழப்பீட்டை அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து கூறுகையில், இந்த விவகாரத்தில் அரசு கடந்த மூன்றரை ஆண்டுகளாக நாட்டுக்கு பொய்யான நம்பிக்கையை அளித்து வந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
'சுஷ்மா பதவி விலக வேண்டும்': ஆம் ஆத்மி கட்சியின் கன்வர் சாந்து கூறுகையில், இராக்கில் இந்தியர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் நாட்டைத் தவறாக வழிநடத்தியதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இடதுசாரிகள் விமர்சனம்: 
இராக்கில் இந்தியர்கள் இறந்தது தொடர்பாக அவர்களின் குடும்பத்தாருக்கு அரசு முதலில் தகவல் தெரிவிக்காதது தவறு என்று மார்க்சிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி எம்.பி. முகமது சலீம் கூறுகையில், இந்த அணுகுமுறையானது மத்திய அரசு எவ்வளவு மனிதத் தன்மையற்றது என்பதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.
இராக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளனர்.
'அரசு உண்மைகளை மறைத்தது ஏன்?': இந்த விவகாரத்தில் இதுநாள் வரை உண்மைகளைத் தெரிவிக்காமல் மத்திய அரசு மறைத்தது ஏன்? என்று இராக்கில் கொல்லப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தார் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக இராக்கில் ஐஎஸ்பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பஞ்சாபைச் சேர்ந்த 31 வயது இளைஞர் நிஷானின் சகோதரர் சர்வான், சண்டீகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'இத்தனை ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் அரசு எங்களிடம் தகவல்களை மறைத்து வந்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதிர்ச்சியான வகையில் அறிவிப்பை வெளியிடுகிறது. நாங்கள் இப்போது என்ன செய்வது?' என்று வேதனை தெரிவித்தார். இதேபோல் கொல்லப்பட்ட மற்ற இந்தியர்களின் குடும்பத்தாரும் தங்கள் வேதனையை வெளியிட்டுள்ளனர்.
தப்பி வந்த இந்தியர் கோரிக்கை: இதனிடையே, இராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த இந்தியரான ஹர்ஜித் மாசி (29) தனக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு மத்திய அரசைக் கோரியுள்ளார். மேலும், தன் மீது பஞ்சாப் போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட ஆள்கடத்தல் வழக்கை வாபஸ் பெறுமாறும் அரசிடம் அவர் கோரியுள்ளார். அவர் பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் மாவட்டம், காலா ஆஃப்கானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com