ஆதார் தகவல்கள் பாதுகாப்பு முறை: உச்ச நீதிமன்றத்தில் கணினி வழி செயல்விளக்கம் அளிக்கும் மத்திய அரசு

ஆதார் தகவல்கள் பாதுகாப்பு முறை: உச்ச நீதிமன்றத்தில் கணினி வழி செயல்விளக்கம் அளிக்கும் மத்திய அரசு

ஆதார் தகவல்கள் பாதுகாப்பு முறைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் கணினி வழி செயல் விளக்கம் அளிக்கிறார்.


புது தில்லி: ஆதார் தகவல்கள் பாதுகாப்பு முறைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் இன்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் கணினி வழி செயல் விளக்கம் அளிக்கிறார்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மூலம் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் அஜய் பூஷண் செயல் விளக்கம் அளிக்க உள்ளார்.

மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்த நிலையில் மத்திய அரசு இன்று விளக்கம் அளிக்கிறது.

ஆதார் தொடர்பான நடைமுறைகளை மின்னணு காட்சி விளக்க முறையில் (பவர் பாயிண்ட் பிரசன்டேஷன்) எடுத்துரைப்பதற்கு அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று கோரிக்கை விடுத்தது. அதனைப் பரிசீலித்த நீதிபதிகள், அதுதொடர்பாக கலந்தாலோசித்து அனுமதி அளித்தனர்.

பல்வேறு சமூக நலத் திட்டங்களின் கீழ் உதவிகள் பெற ஆதாரைக் கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இது மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும், தனிநபர் சுதந்திரத்துக்குப் புறம்பான நடவடிக்கை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதுதொடர்பாக, பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க அரசு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவற்றை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், அந்த விவகாரம் அரசியல் சாசன அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வாதிட்டதாவது:
மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளை இந்திய அரசியல் சாசனம் இரண்டு வகையாக வரையறுக்கிறது. முதலாவது, அனைவருக்கும் உணவு, கல்வி, இருப்பிடம் ஆகியவற்றை அளிப்பது. இரண்டாவது, கருத்துரிமை மற்றும் தனியுரிமை வழங்குவது.

அந்த இரண்டில் எது இன்றியமையாதது? எனக் கேட்டால் நிச்சயமாக அனைவருக்கும் வாழ்வுரிமையை (உணவு, கல்வி) அளிப்பதுதான் முக்கியம் எனக் கூற முடியும். ஒருவருக்கு தனியுரிமையை வழங்குவதைக் காட்டிலும் அடிப்படைத் தேவைகளை முதலில் ஏற்படுத்தித் தருவதுதான் சிறந்ததாக இருக்கும். 

அந்த அடிப்படையில்தான் ஆதார் விவகாரத்தை மத்திய அரசு அணுகுகிறது.
இதுதொடர்பான தெளிவான விளக்கங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) தலைவர் நீதிமன்றத்தில் எடுத்துரைக்க அனுமதிக்க வேண்டும். அதேபோன்று அதனை, மின்னணு காட்சி விளக்க முறையில் தெளிவுபடுத்தவும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார் அவர்.

இதனை ஏற்று, கணினி வழி செயல்விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com