4வது கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டுகள் சிறை

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்காவது வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ்வுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
4வது கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டுகள் சிறை


ராஞ்சி: கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்காவது வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ்வுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1990ம் ஆண்டில் ரூ.13 கோடி அளவுக்கு தும்கா கருவூலத்தில் பணம் மோசடி செய்த வழக்கில் 14 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்காவது வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளி என்று ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் கடந்த திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். எனினும் இவ்வழக்கில் இருந்து பிகாரின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ராவை நீதிமன்றம் விடுவித்தது. அவர் இதுவரை இந்த ஊழல் தொடர்பான இரு வழக்குகளில் விடுவிக்கப்பட்டதும், இரு வழக்குகளில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத்துக்கு என்ன தண்டனை என்பதன் மீதான வாதம் சிறப்பு நீதிமன்றத்தில் 21ஆம் தேதி நடைபெற்று இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

வழக்கின் பின்னணி: ஒருங்கிணைந்த பிகார் மாநிலத்தில் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்திட்டத்தின் பெயரில் அரசுக் கருவூலத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக சிபிஐ வழக்குகளைப் பதிவு செய்தது. அந்த வழக்குகளில் பிகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத், அம்மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்குகள் பிகாரில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலமான ஜார்க்கண்டின் தலைநகர் ராஞ்சியில் அமைந்துள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன.

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான முதலாவது வழக்கில் லாலு குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013, செப்டம்பர் 30இல் தீர்ப்பளித்தது. சைபாசா நகர அரசுக் கருவூலத்தில் இருந்து ரூ . 37.7 கோடியை சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பான அந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து லாலு மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த ஊழல் தொடர்பான இரண்டாவது வழக்கு தேவ்கர் அரசுக் கருவூலத்தில் இருந்து முறைகேடான வழிகளில் ரூ.89.27 லட்சம் எடுக்கப்பட்டது தொடர்பானதாகும். இவ்வழக்கில் லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 23இல் தீர்ப்பளித்தது.

இந்த முறைகேடு தொடர்பான மூன்றாவது வழக்கில் லாலுவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அதே நீதிமன்றம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இது சைபாஸா கருவூலம் தொடர்பான மற்றொரு வழக்காகும். அக்கருவூலத்தில் இருந்து ரூ.37.62 கோடியை முறைகேடாக எடுத்ததே இவ்வழக்கின் குற்றச்சாட்டாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com