ஒரே நாளில் வெளியேறவில்லை

அமித்ஷாவின் குற்றச்சாட்டுகளுக்கு சந்திரபாபு நாயுடு மறுப்பு தெரிவித்துள்ளார். 
ஒரே நாளில் வெளியேறவில்லை

அமித்ஷாவின் குற்றச்சாட்டுகளுக்கு சந்திரபாபு நாயுடு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆந்திர சட்டப் பேரவையில் சனிக்கிழமை மாலை 75 நிமிடங்கள் உரையாற்றிய அவர், அமித் ஷா குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு விஷயத்துக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
 அமித் ஷா முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல்களை தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி தன்னிச்சையாக வெளியேறிவிட்டதாக அமித் ஷா கூறுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி ஒரே நாளில் வெளியேறவில்லை. முதலில் தெலுங்கு தேசம் அமைச்சர்கள் ராஜிநாமா செய்தார்கள். பிறகு மத்திய அரசுக்கு கெடு விதிக்கப்பட்டது.
 பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக, நான் தில்லிக்கு 29 முறை சென்று உங்களைச் சந்தித்து மன்றாடினேன். அந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டியதாகிவிட்டது.
 மத்திய அரசு நிதியுதவி அளித்து வந்ததை ஆந்திர அரசு மூடி மறைத்துவிட்டதாக, அமித் ஷா குற்றம் சாட்டுகிறார். பிரதமர் மோடி, குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அரசு திட்டங்களை அறிமுகப்படுத்தும்போது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் படத்தைப் பயன்படுத்தினாரா? அந்தத் துணிச்சல் அப்போது பாஜகவுக்கு இருந்ததா?
 இந்த நெருக்கடியான நேரத்தில் ஆந்திரத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏக்கள், தில்லியில் உள்ள கட்சித் தலைமை பக்கம் நிற்காமல், மாநிலத்தின் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள்(பாஜக) வரலாற்றில் தவறு செய்தவர்களாகி விடுவீர்கள்.
 ஆந்திர மக்களை எளிதில் ஏமாற்றி விடலாம் என்று உங்களிடம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்களின் வலையில் நீங்கள் சிக்கியிருக்கிறீர்கள். இதே தவறை கடந்த 2014-ஆம் ஆண்டு செய்த காங்கிரஸ் கட்சிக்கு என்ன நேர்ந்தது என்பதை நாங்கள் அறிவோம்.
 நிதி மோசடியில் ஈடுபட்டு கைதாகி, பிணையில் வெளியே வந்திருக்கும் குற்றவாளியை (ஜகன் மோகன் ரெட்டி) பிரதமர் அடிக்கடி சந்தித்துப் பேசுகிறார். அமித் ஷாவும், பாஜகவும் இதை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
 ஆந்திரத்துக்கு நீதி வழங்காவிட்டால், பாஜகவும், மத்திய அரசும் ஆந்திர மாநில மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். தவறுகளை நீங்கள் சரிசெய்யாவிட்டால், காலம் சரி செய்து விடும் என்றார் சந்திரபாபு நாயுடு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com