மாநிலங்களவைத் தேர்தல் தோல்வி: சமாஜவாதி உடனான உறவை பாதிக்காது; மாயாவதி

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வி அடைந்ததால் சமாஜவாதி கட்சியுடனான நல்லுறவில் பாதிப்பு ஏற்படாது என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
மாநிலங்களவைத் தேர்தல் தோல்வி: சமாஜவாதி உடனான உறவை பாதிக்காது; மாயாவதி

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வி அடைந்ததால் சமாஜவாதி கட்சியுடனான நல்லுறவில் பாதிப்பு ஏற்படாது என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
 இதுகுறித்து லக்னௌவில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
 மாநிலங்களவைத் தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பீமராவ் அம்பேத்கருக்கு ஆதரவாக வாக்களித்த காங்கிரஸ் மற்றும் சமாஜவாதி கட்சியின் எம்எல்ஏக்களுக்கு நன்றி. அதேபோல், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் எம்எல்ஏ கைலாஷ் நாத் சோனேகர் எங்களுக்கு ஆதரவாக மனசாட்சிப்படி வாக்களித்தார். அவருக்கு ஏதேனும் பிரச்னை என்றால் பகுஜன் சமாஜ் துணை நிற்கும்.
 மாநிலங்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்து விட்டார். இந்த சூழலில், பகுஜன் சமாஜ், சமாஜவாதி இடையே மனக்கசப்பை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கிறேன். கடந்த காலங்களில் சமாஜவாதியுடன் நடந்த சில நிரூபிக்கப்படாத கசப்பான அனுபவங்களை பாஜக மீள் உருவாக்கம் செய்து இரு கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
 (கடந்த 1995-ஆம் ஆண்டில் மாயாவதியின் இல்லத்தில் அவரை கொலை செய்ய ஒருவர் முயன்றார். அவர் சமாஜவாதி கட்சியைச் சேர்ந்தவர் என்று அப்போது கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது)
 அந்த காலகட்டத்தில் சமாஜவாதியின் தலைவராக அகிலேஷ் யாதவ் பதவி வகிக்கவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுடைய கூட்டணி தொடரும். அடுத்த ஆண்டு (2019) நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவோம் என்றார் மாயாவதி.
 பகுஜன் சமாஜ் எம்எல்ஏ இடைநீக்கம்: இதனிடையே, மாநிலங்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினருக்கு ஆதரவாக வாக்களிக்காமல் பாஜகவுக்கு அணி மாறி வாக்களித்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து, எம்எல்ஏ அனில் சிங்கை மாயாவதி இடைநீக்கம் செய்தார்.
 உத்தரப் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 10 இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 9 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஓர் இடத்தில் சமாஜவாதி வென்றது.
 இதற்கு முன்பு அந்த மாநிலத்தில் கோரக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சிக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு தெரிவித்தது.
 அந்தத் தொகுதிகளில் பாஜக தோல்வியைச் சந்தித்தது நினைவுகூரத்தக்கது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com