சிந்து நதிநீர் பங்கீடு: இந்தியா, பாகிஸ்தான் இடையே நாளை பேச்சுவார்த்தை

சிந்து நதிநீர் பங்கீடு: இந்தியா, பாகிஸ்தான் இடையே நாளை பேச்சுவார்த்தை

சிந்து நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் குறித்து இந்தியா, பாகிஸ்தான் இடையே இரு தினங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிந்து நதிநீர் பங்கீடு தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆம் ஆண்டு சிந்து நதி நிரந்தர ஆணையம் (பிஐசி) அமைக்கப்பட்டது. இதில் இவ்விரு நாடுகளுக்கு இடையே பாயும் பீஸ், ரவி, சுட்லெஜ், சிந்து, செனாப் மற்றும் ஜெலும் ஆகிய 6 நதிகளின் பயன்பாடு தொடர்பாக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. 

இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையிலும் நதிநீர் பங்கீடு தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு குறித்து கூட்டு நடவடிக்கைகள் நடத்துவது கட்டாயமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

உலக வங்கியின் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் 3 நதிகள் பாகிஸ்தானுக்கும், கடைசி 3 நதிகள் இந்தியாவுக்கும் என்று குறிப்பிடப்பட்டது. இதையடுத்து இந்த ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

கடந்த வருடம் மார்ச் மாதம் சிந்து நதி நிரந்தர ஆணையத்தின் 113-ஆவது கூட்டம் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்நிலையில், இதன் 114-ஆவது ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் இந்த ஒப்பந்தத்தின் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசு, தங்களது கட்டுப்பாட்டில் உள்ள நதிகளில் இருந்து 330 மெகாவாட் உற்பத்தி கொண்ட கிஷங்கங்கா ஹைட்ரோ பவர் பிளாண்ட் மற்றும் 850 மெகாவாட் உற்பத்தி கொண்ட ரேட்டில் ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. இதனால் தங்களுக்கு வரவேண்டிய நீர் பங்கீடு அளவு குறைவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. எனவே இந்த பேச்சுவார்த்தையின் போது இதுகுறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com