கர்நாடகாவின் வளர்ச்சி குறித்து விவாதத்திற்கு தயாரா?: பாஜகவுக்கு சித்தராமையா விட்ட பகிரங்க சவால்  

கர்நாடகாவின் வளர்ச்சி குறித்து வெளிப்படையான விவாதத்திற்கு தயாரா என்று பாஜகவின் எடியூரப்பா மற்றும் பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
கர்நாடகாவின் வளர்ச்சி குறித்து விவாதத்திற்கு தயாரா?: பாஜகவுக்கு சித்தராமையா விட்ட பகிரங்க சவால்  

பெங்களூரு: கர்நாடகாவின் வளர்ச்சி குறித்து வெளிப்படையான விவாதத்திற்கு தயாரா என்று பாஜகவின் எடியூரப்பா மற்றும் பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தொடர்ச்சியாக தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அத்துடன் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் கர்நாடகாவில் முகாமிட்டு பாஜவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகாவின் வளர்ச்சி குறித்து வெளிப்படையான விவாதத்திற்கு தயாரா என்று பாஜகவின் எடியூரப்பா மற்றும் பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

கர்நாடகத்தின் நலனுக்காக, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து பகிரங்கமாக விவாதிக்க எடியூரப்பா தயாரா? இவ்வாறு ஒரு வெளிப்படையான விவாதம் நடைபெற்றால் புதிய கர்நாடகத்தை உருவாக்குபவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள். கர்நாடகத்தில் கடந்த 40 ஆண்டுகளில் 5 ஆண்டு பதவி காலத்தை பூர்த்தி செய்தவர் என்ற பெருமை எனக்கு உண்டு.

ஆனால் கர்நாடக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முன்னாள் முதல்வரான எடியூரப்பா சிறைக்கு சென்றார். எடியூரப்பா அவர்களே இந்த விவாதத்திற்கு வாருங்கள். கர்நாடகத்தில் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் குழு ஒன்று சேர்ந்து தகிப்பான் சூழலை உருவாக்கி இருக்கிறது. அதை தாண்டி மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

பிரதமர் மோடி வெளிப்படையாகவே தேவையில்லா விவகாரங்களில் மிகைப்படுத்தி பேசுகிறார், அவருடன் என்னுடைய போட்டி கிடையாது, எடியூரப்பாவுடன்தான். ஒரே மேடையில் நேரடி விவாதத்திற்கு சவால் விடுக்கிறேன், அவர் ஏற்றுக்கொள்வாரா? விரும்பினால் மோடியையும் வரவேற்கிறேன்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதே விஷயம் தொடர்பாக கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பத்திரிக்கையில் விளம்பரம் ஒன்றும்  கொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com