சோனியா பிரச்சாரத்தால் டெபாசிட்டுகளைக் காப்பாற்றலாம் என காங்கிரஸ் நினைக்கிறது: பிரதமர் மோடி கிண்டல் 

சோனியா பிரச்சாரத்தால் தங்களது டெபாசிட்டுகளைக் காப்பாற்றலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைப்பதாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.
சோனியா பிரச்சாரத்தால் டெபாசிட்டுகளைக் காப்பாற்றலாம் என காங்கிரஸ் நினைக்கிறது: பிரதமர் மோடி கிண்டல் 

விஜயபுரா: சோனியா பிரச்சாரத்தால் தங்களது டெபாசிட்டுகளைக் காப்பாற்றலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைப்பதாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.

கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தொடர்ச்சியாக தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

உடல்நலக் குறைபாடால் கடந்த இரு ஆண்டுகளாக பரபரப்பு அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்த சோனியா காந்தி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிஜய்ப்பூர் பகுதியில் கூட்டம் ஒன்றில் செவ்வாயன்று பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் சோனியா பிரச்சாரத்தால் தங்களது டெபாசிட்டுகளைக் காப்பாற்றலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைப்பதாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயபுரா என்ற பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

திங்களன்று பேட்டி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் காங்கிரசில் மகன் (ராகுல் காந்தி) எதுவும் செய்ய இயலவில்லை என்று பேசுவதைப் பார்த்தேன். ஒருவேளை தாயாரை (சோனியா காந்தி) அழைத்து வந்தால் அவர் ஏதாவது செய்வார், அதன் மூலம் டெபாசிட்டுகளைக் காப்பாற்றலாம் என காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கிறார்கள் போல உள்ளது.

தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் மக்களிடையே பிரிவினையை உண்டாக்குகிறது. அத்துடன் காங்கிரஸ் பெண்களின் பாதுகாப்பினைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறது. அதே சமயம் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா கொண்டு வரப்பட்ட பொழுது காங்கிரஸ் ஆதரவு  தரவில்லை.

பாரதிய ஜனதா வளர்ச்சியினை முன்வைத்து மக்களிடம் வாக்குகளை சேகரிக்கிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர்களுக்கு தங்களது வாரிசுத் தலைவர்களின் மீதே நம்பிக்கை இல்லை.

லிங்காயத்து சமுதாயத்தைத் தோற்றுவித்தவரான பஸவேஸ்வரா விஜயபுராவைச் சேர்ந்தவர் என்பதை முன்னிறுத்தி  பேசிய மோடி, ‘மஹான் பஸவேஸ்வரா அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற கொள்கை உடையவர். ஆனால் காங்கிரஸ் அரசு மக்களை மதம், ஜாதி மற்றும் ஓட்டு எண்ணிக்கையில் பிரிக்கிறது. எனவே அந்த சமுதாயத்தினர் காங்கிரஸை புறக்கணித்து விடுவார்கள். ஜாதி என்னும் விஷத்தினை தங்களுக்குள் அனுமதிக்க மாட்டார்கள்’ என்று தெரிவித்தார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com