கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மாயம்: மோடியின் பிடியில் உள்ளதாக தகவல்

கர்நாடக மாநிலத்தில் பாஜகவின் குதிரை பேரம் தொடங்கியிருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு
கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மாயம்: மோடியின் பிடியில் உள்ளதாக தகவல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பாஜகவின் குதிரை பேரம் தொடங்கியிருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மோடியின் பிடியில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. கூறியுள்ளார். 

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 78 இடங்களிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓரிடம் கிடைத்துள்ளது. இதுதவிர சுயேச்சை உள்ளிட்ட 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதையடுத்து எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. 

அதேவேளையில், காங்கிரஸ் - மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து தங்கள் கூட்டணிக்கே பெரும்பான்மை இருப்பதாக கூறி தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று உரிமை கோரியது. இதையடுத்து சட்ட நிபுணர்களுடன் சட்ட ஆலோசனை செய்த ஆளுநர் வாஜூபாய் வாலா, பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததார். 

இந்நிலையில், பல்வேறு பரபரப்புகளுக்கிடையே இன்று எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றாப். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணமும் செய்து வைத்ததுடன், இன்னும் 15 நாட்களுக்குள் அவர் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து எடியூரப்பா பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவை வளாகத்தில் காங்கிஸ் கட்சியினர் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷிடம், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த சுரேஷ், ‘ஆனந்த் சிங் தவிர அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இங்கே உள்ளனர். ஆனந்த் சிங் மோடியின் பிடியில் உள்ளார்’ என்று தெரிவித்தார். 

இதன் மூலம் குமாரசாமி குறிப்பிட்டது போல், பெரும்பான்மைய நிரூபிப்பதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டு, ஆள் பிடிக்கும் வேலையை பாஜக தொடங்கிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் மத்தியில் பரவலகா பேசப்பட்டு வருகிறது. 

ஆட்சியமைப்பதற்காக பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. எங்கள் கட்சியில் பிளவை ஏற்படுத்துவதற்கு எம்எல்ஏக்களிடம் பாஜக ரூ.100 கோடி பேரம் பேசியது. இந்த பணம், கருப்புப் பணமா அல்லது வெள்ளைப் பணமா என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என குமாரசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை எந்த எம்எல்ஏவும் புறக்கணிக்கவில்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர்' என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ள நிலையில், எம்.எல்.ஏ ஆனந்த் சிங் காணவில்லை என்பது கர்நாடகா அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com