அதிநவீன பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

அதிநவீன ஆற்றல் வாய்ந்த பிரமோஸ் ஏவுகணை ஒடிஸா மாநிலம், பலாசோரில் திங்கள்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இலக்கை நோக்கிச் செல்லும் அதிநவீன பிரமோஸ் ஏவுகணை.
இலக்கை நோக்கிச் செல்லும் அதிநவீன பிரமோஸ் ஏவுகணை.

அதிநவீன ஆற்றல் வாய்ந்த பிரமோஸ் ஏவுகணை ஒடிஸா மாநிலம், பலாசோரில் திங்கள்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ரஷியாவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணையானது சுமார் 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் தளவாடங்களைக்கூட அழிக்கும் திறன் கொண்டது. தற்போது அதன் இயக்க தூரத்தை 400 கிலோ மீட்டரில் இருந்து 800 கிலோ மீட்டர் வரையிலும் நீட்டிக்கும் வகையிலான தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் ரஷியாவின் என்பிஓஎம் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணையின் மொத்த எடை 3 டன் ஆகும். போர் விமானங்களில் இருந்து இயக்குவதற்காக அந்த ஏவுகணையின் எடை 500 கிலோவாக குறைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 300 கிலோ எடை வரையிலான வெடி பொருள்களைத் தாங்கிச் செல்லும் திறனும் அதற்கு உண்டு. அதைத் தவிர, வேறு சில தொழில்நுட்ப வசதிகளும் அதில் அமைந்துள்ளன. 8.5 மீட்டர் நீளம் கொண்ட பிரமோஸ் ஏவுகணை ஏற்கெனவே பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒடிஸா மாநிலம், பலாசோரின் சந்திப்பூரில் உள்ள ஏவுதளத்தில் பிரமோஸ் ஏவுகணை சோதனை திங்கள்கிழமை நடத்தப்பட்டது. அதன் இயக்க தூரம் நீட்டிக்கப்பட்டு புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் செய்த பிறகு இச்சோதனை நடைபெற்றது. காலை 10.40 மணிக்கு ஏவுகணையானது விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் செயல்பாடுகள் ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டன. குறிப்பிட்ட நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது பிரமோஸ் ஏவுகணை. இதையடுத்து சோதனை வெற்றி பெற்றதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக டிஆர்டிஓ அதிகாரிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுகோய் } 30 ரக போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com