பாஜக பேரம் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது

கர்நாடகத்தில் பாஜக தலைவர்கள் தம்மிடம் பேரம் பேசியதாக வெளியான ஆடியோ பதிவு போலியானது என்று காங்கிஸ் எம்எல்ஏ சிவராஜ் ஹெப்பர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் பாஜக தலைவர்கள் தம்மிடம் பேரம் பேசியதாக வெளியான ஆடியோ பதிவு போலியானது என்று காங்கிஸ் எம்எல்ஏ சிவராஜ் ஹெப்பர் தெரிவித்துள்ளார். சொந்த கட்சியைச் சேர்ந்த ஒருவரே இத்தகைய தகவலை வெளியிட்டிருப்பது காங்கிரஸூக்கு புதிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ஒவ்வொரு கட்சியும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகச் செய்திகள் வெளியாகின.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை தங்களது பக்கம் ஈர்க்க பாஜக தரப்பு முனைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, பாஜகவினர் பேரம் பேசியதாக பல்வேறு செல்லிடப்பேசி உரையாடல் பதிவுகளை காங்கிரஸ் வெளியிட்டது. அதில், எல்லப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஹெப்பரின் மனைவியுடன் பாஜக தலைவர்கள் பேசியதாக வெளியிடப்பட்ட பதிவும் ஒன்று.
இதை முன்னிறுத்தி பிரதமர் மோடியையும், பாஜக தலைவர்களையும் காங்கிரஸார் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், முகநூலில் காங்கிரஸின் குற்றச்சாட்டை பொய்யாக்கும் விதமாக ஒரு கருத்தை ஹெப்பர் பதிவிட்டிருந்தார்.
தனது மனைவியுடன் பாஜக தலைவர்கள் பேரம் பேசியதாக வெளியான ஆடியோ பதிவு போலியாக சித்திரிக்கப்பட்ட ஒன்று என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த உரையாடலில் பேசியது எனது மனைவியல்ல என்றும் ஹெப்பர் கூறியுள்ளார்.
இது பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வரும் பிரசாரங்களுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏவான பி.சி.பாட்டீல், "தன்னிடம் எடியூரப்பா, முரளிதர ராவ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேரம் பேசியது உண்மைதான்; அதேவேளையில் ஹெப்பரின் கருத்து தொடர்பாக எதுவும் கூற முடியாது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com