பணம் கேட்டு மிரட்டல்: உ.பி. பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர் புகார்

மர்ம நபர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் வந்ததாக உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மர்ம நபர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் வந்ததாக உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
வீர் விக்ரம் சிங், பிரேம் நாராயண் பாண்டே, வினய் குமார் திவிவேதி, வினோக் கட்டியார், ஷஷாங் திரிவேதி, அனிதா ராஜ்புத் ஆகிய பாஜகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து அந்த மாநில காவல் துறை டிஐஜி (சட்டம்-ஒழுங்கு) பிரவீண் குமார் கூறியதாவது: துபையிலிருந்து அலி புதேஷ் பாய் என்ற பெயரில் உள்ள வங்கிக் கணக்குக்கு ரூ.10 லட்சம் செலுத்துமாறு 6 எம்எல்ஏக்களுக்கு செல்லிடப்பேசி மூலம் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பணத்தை அடுத்த சில தினங்களுக்குள் செலுத்தத் தவறும்பட்சத்தில் குடும்பத்தினரை கொலை செய்வோம் என்றும் மிரட்டல் விடப்பட்டதாக 6 எம்எல்ஏக்களும் புகார் அளித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று பிரவீண் குமார் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களின் வீடுகளுக்கும், அவர்களின் உறவினர் குடும்பத்தினருக்கும் தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த மாநில காவல் துறை கூடுதல் டிஜி தெரிவித்தார்.
எம்எல்ஏ வினோத் கட்டியார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வங்கிக் கணக்கு ஒன்றில் ரூ.10 லட்சம் செலுத்துமாறு மர்ம நபரிடம் இருந்து செல்லிடப்பேசி மூலம் எனக்கு மிரட்டல் வந்தது. அவர் கேட்ட தொகையை நான் கொடுக்கவில்லை என்றால் குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாகவும் அவர் மிரட்டினார்' என்றார்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உத்தரப் பிரதேச காவல் துறை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com