பிரதமரின் பயணச் செலவினங்கள்: விமானப் படை அதிகாரிகள் மீது தகவல் ஆணையம் அதிருப்தி

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவினங்கள் தொடர்பான விவரங்களை உரிய காலத்துக்குள் அளிக்காமல் தாமதப்படுத்தியதாக விமானப் படை அதிகாரிகள் இருவர் மீது மத்திய தகவல் ஆணையம் கடும் அதிருப்தி

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவினங்கள் தொடர்பான விவரங்களை உரிய காலத்துக்குள் அளிக்காமல் தாமதப்படுத்தியதாக விமானப் படை அதிகாரிகள் இருவர் மீது மத்திய தகவல் ஆணையம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
விமானப் படை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையானது, துறைசார்ந்த அறிவு அவர்களுக்குக் குறைவாக இருப்பதையே காட்டுகிறது என்றும் தகவல் ஆணையம் விமர்சித்துள்ளது.
ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படை அதிகாரி லோகேஷ் பத்ரா என்பவர் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விமானப் படையிடம் சில விவரங்களைக் கோரியிருந்தார். அதாவது, பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவினம் எவ்வளவு?, அதனை ஏற்றுக் கொள்வது எந்தத் துறை? என்பன போன்ற விவரங்களை அதன் வாயிலாக அவர் கேட்டிருந்தார்.
அந்த மனுவை பரிசீலித்த விமானப் படை, பிரதமர் பயணம் செய்த தேதி, சென்ற இடங்கள் உள்ளிட்ட தகவல்களை மட்டுமே அளித்ததாகத் தெரிகிறது. 
அதேவேளையில் பயணச் செலவின விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து விமானப் படை உயரதிகாரி சுமன் அதிகாரியிடம் மனுதாரர் மேல்முறையீடு செய்தார். அதை அவர், மேற்கு மண்டல விமானப் படை அதிகாரி இளமுருகுவுக்கு அனுப்பி
யுள்ளார்.
ஏறத்தாழ 5 மாதங்களுக்குப் பிறகு அந்தத் தகவல்கள் தங்களிடம் இல்லை என்று மேற்கு மண்டல விமானப் படை தெரிவித்துள்ளது. அதன் பின்னர், விமானப் படைத் தலைமையகத்துக்கு அந்த மனு அனுப்பப்பட்டுள்ளது. இறுதியாக, பிரதமரின் பயணச் செலவினங்களை இந்தியத் தூதரம் ஏற்றுக் கொள்வதாக பதில் கிடைத்துள்ளது.
ஏறத்தாழ 7 மாத அலைக்கழிப்புக்குப் பின்னர் ஒரு சில தகவல்களை மட்டுமே விமானப் படை தனக்கு அளித்துள்ளதாகக் கூறிய லோகேஷ் பத்ரா, இதுதொடர்பாக மத்திய தகவல் ஆணையத்திடம் முறையிட்டார். அதை விசாரித்த தகவல் ஆணையர் திவ்ய பிரகாஷ் சின்ஹா, விமானப் படை அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு கடும் அதிருப்தி தெரிவித்தார்.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுவை காலந்தாழ்த்துவதற்கு இரு காரணங்கள்தான் இருக்க முடியும் என்று கூறிய அவர், ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு துறைசார்ந்த தகவல்கள் தெரியாமல் இருக்கக்கூடும் அல்லது மிகக் குறைந்த அளவே தெரிந்திருக்கக் கூடும் என்று 
தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com