2ஜி மேல்முறையீட்டு வழக்கை தாமதப்படுத்த முயற்சி: சிபிஐ குற்றச்சாட்டு

2ஜி மேல்முறையீட்டு வழக்கை தாமதப்படுத்த எதிர்தரப்பினர் முயற்சிப்பதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. 2ஜி

2ஜி மேல்முறையீட்டு வழக்கை தாமதப்படுத்த எதிர்தரப்பினர் முயற்சிப்பதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. 2ஜி முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த மார்ச் மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டன. 
இந்த இரண்டு மனுக்களும் தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 19 பேரும் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. மேலும், வழக்கு விசாரணை மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மனுக்கள் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. கர்க் அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை சார்பில் வழக்குரைஞர் துஷார் மேத்தா ஆஜராகி, '2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட முறைகேட்டால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், 2ஜி வழக்கு நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பை உருவாக்கியிருப்பதுடன், களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது' என்றார்.
இதைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு மனுக்களுக்கு பதில் அளிக்க எதிர்மனுதாரர்கள் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு வழக்குரைஞர் துஷார் மேத்தா ஆட்சேபம் தெரிவித்தார். அவர் வாதிடுகையில், 'வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் உத்தியை எதிர்மனுதாரர்கள் கையாண்டு வருகின்றனர்' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி எஸ்.பி. கர்க், 'பதில் அளிக்க எதிர் மனுதாரர்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கும், அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்படுகின்றன' என்றார்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com