ஐஎஃப்எஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு: ஹிமாசல் உயர் நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

ஹிமாசல பிரதேச தலைமைச் செயலர் வினீத் செளதரி தனக்கு எதிராக தொடுத்துள்ள குற்றவியல் அவதூறு வழக்கிற்கு தடை கோரிய இந்திய வனப் பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரியான சஞ்ஜீவ் சதுர்வேதியின் மனுவை

ஹிமாசல பிரதேச தலைமைச் செயலர் வினீத் செளதரி தனக்கு எதிராக தொடுத்துள்ள குற்றவியல் அவதூறு வழக்கிற்கு தடை கோரிய இந்திய வனப் பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரியான சஞ்ஜீவ் சதுர்வேதியின் மனுவை தள்ளுபடி செய்து ஹிமாசல பிரதேச உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
 இதுதொடர்பாக சஞ்சீவ் சதுர்வேதி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, "மனுதாரரின் (சஞ்ஜீவ் சதுர்வேதி) மனுவை ஹிமாசல பிரதேச உயர் நீதிமன்றம் முறையாக விசாரிக்காமல் தள்ளுபடி செய்துள்ளது.
 எனவே, அந்த மனு மீது மீண்டும் விசாரணை நடத்தி உரிய உத்தரவு பிறப்பிக்கும் வகையில், ஹிமாசல பிரதேச உயர் நீதிமன்ற விசாரணைக்காக இந்த விவகாரம் மீண்டும் அனுப்பி வைக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டது.
 இந்த வழக்கு குறித்த விவரம் வருமாறு: கடந்த 2014-ஆம் ஆண்டில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக சஞ்ஜீவ் சதுர்வேதியும், அந்த மருத்துவமனையின் துணை இயக்குநராக வினீத் செளதரியும் இருந்தனர்.
 அப்போது, வினீத் செளதரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள், துறை ரீதியான விசாரணைகள் குறித்து, ஹிமாசல பிரதேசத்தின் அப்போதைய தலைமைச் செயலருக்கு சஞ்ஜீவ் சதுர்வேதி கடிதம் அனுப்பியுள்ளார்.
 இந்நிலையில், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அந்தக் கடிதத்தை சஞ்ஜீவ் சதுர்வேதி பொதுவில் வெளியிட்டதாகக் கூறி வினீத் செளதரி கடந்த 2016 ஏப்ரலில் அவதூறு வழக்கு பதிவு செய்தார்.
 அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிம்லா நீதிமன்றம் சஞ்ஜீவ் சதுர்வேதிக்கு அழைப்பாணை அனுப்பி உத்தரவிட்டது. அந்த அழைப்பாணையையும், வினீத் செளதரி தொடுத்துள்ள வழக்கையும் ரத்து செய்யக் கோரி ஹிமாசல பிரதேச உயர் நீதிமன்றத்தில் சஞ்ஜீவ் சதுர்வேதி மனு தாக்கல் செய்தார். எனினும், இந்த விவகாரத்தில் தலையிட இயலாது எனக் கூறிய உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு கூறி அவரது மனுவை தள்ளபடி செய்தது. இதை எதிர்த்து சஞ்ஜீவ் சதுர்வேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மேற்கண்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com