சபரிமலை: 10 - 50 வயது பிரிவில் 500 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு

சபரிமலை கோயிலில் ஐயப்பன் தரிசனத்துக்காக இணையதளத்தில் முன்பதிவு செய்துள்ளவர்களில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், பாரம்பரிய அடிப்படையில் தடை செய்யப்பட்ட வயது (10-50) பிரிவைச் சேர்ந்தவர்கள்
சபரிமலை: 10 - 50 வயது பிரிவில் 500 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு

சபரிமலை கோயிலில் ஐயப்பன் தரிசனத்துக்காக இணையதளத்தில் முன்பதிவு செய்துள்ளவர்களில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், பாரம்பரிய அடிப்படையில் தடை செய்யப்பட்ட வயது (10-50) பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கேரள காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதையும் மீறி சபரிமலை வரும் பெண்களை பக்தர்களே தடுத்து வருகின்றனர். 
இந்நிலையில், மாத விலக்கு வயதில் இருக்கும் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஐயப்ப தரிசனத்துக்காக முன்பதிவு செய்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இதுகுறித்து கேரள காவல்துறையினர் கூறியதாவது:
சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக வரும் 16-ஆம் தேதி நடை திறக்கப்படவுள்ளது. இதையொட்டி, தரிசனத்துக்கான முன்பதிவுகள் 'www. 
sabarimalaq.com' என்ற இணையதளத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த முன்பதிவுகள் அனைத்தும் காவல்துறையின் இணைய நுழைவு தொடுப்பின் வழியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. அந்த அடிப்படையில் முன்பதிவு விவரங்களை நாங்கள் ஆராய்ந்தபோது, கடந்த சனிக்கிழமை வரையில் 10 முதல் 50 வயது பிரிவைச் சேர்ந்த 539 பெண்கள் ஐயப்பன் தரிசனத்துக்காக முன்பதிவு செய்துள்ளனர்.
அதில் ஒரே பெயரில் பல பெண்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் உண்மையிலேயே வெவ்வேறு நபர்கள் தானா? அல்லது ஒரே நபரால் அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. 
முன்பதிவுகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. கட்டண முறை கொண்டுவந்து, கடன் அட்டை உள்ளிட்டவற்றின் மூலமாக கட்டணம் செலுத்தப்படும் பட்சத்தில், முன்பதிவு செய்வோரை அடையாளம் காண இயலும். எனவே, முன்பதிவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்க அனுமதிக்குமாறு அரசிடம் அனுமதி கோரப்பட்டது. தற்போது வரையில் அதற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை.
அரசு இணையதள தகவலின்படி, நிலக்கல்லில் இருந்து பம்பாவுக்கு செல்வதற்கான கேரள அரசு பேருந்து பயணச்சீட்டு இல்லாவிட்டால், டிஜிட்டல் நுழைவுச் சீட்டு செல்லுபடியாகாது. 
ஆனால், இந்த 539 பெண்களும் கேரள அரசு பேருந்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யவில்லை. சிலர் பாத யாத்திரையாக வர முடிவு செய்திருக்கும் பட்சத்தில், பேருந்தில் செல்லுமாறு அவர்களை வலியுறுத்த இயலாது. எனினும், அரசு பேருந்தில் செல்லுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்குவோம் என்று காவல்துறையினர் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com