ஆர்பிஐ சட்டம் குறித்த விவாதம் துரதிருஷ்டவசமானது: ரிசர்வ் வங்கி முன்னாள் துணை ஆளுநர் கருத்து

ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வகை செய்யும் ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7-ஆவது பிரிவு குறித்து விவாதிப்பது துரதிருஷ்டவசமானது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஆர்.காந்தி கூறி
ஆர்பிஐ சட்டம் குறித்த விவாதம் துரதிருஷ்டவசமானது: ரிசர்வ் வங்கி முன்னாள் துணை ஆளுநர் கருத்து

ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வகை செய்யும் ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7-ஆவது பிரிவு குறித்து விவாதிப்பது துரதிருஷ்டவசமானது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஆர்.காந்தி கூறினார்.
 ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7-ஆவது பிரிவின்படி, மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவுகளைப் பிறப்பிக்க சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சட்டப் பிரிவு பயன்படுத்தப்படாமல் இருந்தது. அண்மைக் காலமாக, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. இந்நிலையில், 7-ஆவது சட்டப் பிரிவை பயன்படுத்தி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது.
 இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதாகவும், அந்த சட்டப் பிரிவை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
 இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஆர்.காந்தி, இதுகுறித்து பிடிஐ செய்தியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
 ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தொடர்ச்சியான இடைவெளிகளில் அடிக்கடி கூடி ஆலோசித்து முடிவெடுத்தால், இதுபோன்ற பிரச்னைகளே வராது. ஆனால், தற்போது நடைபெறும் விவாதங்கள், இந்த நடைமுறையில் சில பிரச்னைகள் இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன. ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றால் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்து விடும்.
 வழக்கமாக, பல்வேறு விவகாரங்களை ரிசர்வ் வங்கி தொலைநோக்கு பார்வையுடனும், மத்திய அரசு குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது வழக்கம். ஒரு குறிப்பிட்ட துறையில் வெவ்வேறு நிலைப்பாடுகள், கருத்துகள் தோன்றலாம். இவ்வாறு வெவ்வேறு கருத்துகள் வெளிப்படுவது ஆரோக்கியமான சூழலுக்கான அறிகுறி. அதே வேளையில், சம்பந்தப்பட்ட துறையினர் தீவிரமாக விவாதித்த பிறகே முடிவெடுப்பது நல்லது.
 எனவே, தற்போது நடைபெறும் விவாதத்தை தவறாக நான் கருதவில்லை.
 எனினும், ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7-ஆவது பிரிவை பயன்படுத்துவது தொடர்பாக நடைபெறும் ஒட்டுமொத்த விவாதமும் துரதிருஷ்டவசமானது.
 ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு நிதி பெறுவதற்கு அடிப்படை வரைவுத் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் நான்கரை ஆண்டுகளுக்கு முன் ஆலோசனை தெரிவித்தார். ஆனால், அப்போது அதை ஏற்க மறுத்த மத்திய அரசு, அதே கோரிக்கையை தற்போது முன் வைத்துள்ளது.
 மத்திய அரசின் அனைத்து கோரிக்கைகளையும் ரிசர்வ் வங்கி அப்படியே ஏற்றுக் கொள்ளாது. அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்த பிறகு, பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும் வகையில் ரிசர்வ் வங்கி முடிவெடுக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com