இந்திய எண்ணெய்க் கிடங்கைப் பயன்படுத்த அபுதாபி நிறுவனத்துக்கு அனுமதி

இந்தியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கை, அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கு குத்தகை விடுவது தொடர்பான ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது.

இந்தியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கை, அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கு குத்தகை விடுவது தொடர்பான ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது.
 கர்நாடக மாநிலத்தில் மங்களூரு, பாடூர் ஆகிய இடங்களிலும், ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினத்திலும் பூமிக்கு அடியில் கச்சா எண்ணெய்யை சேமித்து வைப்பதற்கான கிடங்குகளை மத்திய அரசு அமைத்துள்ளது.
 மங்களூரில் உள்ள கிடங்கில் 15 லட்சம் டன் எண்ணெய்யையும், பாடூரில் உள்ள கிடங்கில் 25 லட்சம் டன் எண்ணெய்யையும், விசாகப்பட்டினத்தில் உள்ள கிடங்கில் 13.3 லட்சம் டன் எண்ணெய்யையும் இருப்பு வைக்க முடியும்.
 இந்த கச்சா எண்ணெய்யை வைத்து, அவசர காலத்தில் 9.5 நாள்களுக்கான எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இவற்றில், விசாகப்பட்டினம் எண்ணெய்த் கிடங்கு ஏற்கெனவே ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டு விட்டது.
 மங்களூரில் உள்ள சேமிப்புக் கிடங்கு அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் குத்தகைக்கு விடப்பட்டது. இந்நிலையில், பாடூரில் உள்ள சேமிப்புக் கிடங்கை அபுதாபி நிறுவனத்துக்கு குத்தகைக்கு அளிக்கும் ஒப்பந்தம் திங்கள்கிழமை கையெழுத்தானது.
 அவசர காலத்தில், அந்த சேமிப்புக் கிடங்கில் உள்ள எண்ணெய்யை இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்ற நிபந்தனையுடன் ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளது.
 இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக, அபுதாபி சென்றுள்ள பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்த தகவல்களை தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com