பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகள் பெரும் பாதிப்பு: ராகுல் காந்தி தாக்கு

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகள் பெரும் பாதிப்படைந்தனர்; அதேநேரத்தில் வசதிபடைத்தவர்கள் அதிகம் பயனடைந்தனர் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி
கோப்புப்படம்
கோப்புப்படம்


பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகள் பெரும் பாதிப்படைந்தனர்; அதேநேரத்தில் வசதிபடைத்தவர்கள் அதிகம் பயனடைந்தனர் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு 2ஆவது கட்டமாக வரும் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலையொட்டி, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சத்தீஸ்கர் மாநிலம் மஹசமுந்த், பலோடா பஜார் ஆகிய இடங்களில் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம், தொழிலதிபர் அனில் அம்பானி லாபமடைவதை மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி செய்துள்ளது. ஏழைகளிடம் இருந்து ரூ.30,000 கோடியை பறித்து, தொழிலதிபர் அனில் அம்பானியிடம் மத்திய அரசு அளித்துள்ளது.
சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, மாநிலத்தில் ஆட்சியமைத்தால், பத்தே நாள்களில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம், மக்களின் படுக்கைக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் வெளியே கொண்டு வரப்பட்டிருப்பதாக மோடி கூறியுள்ளார். அவர் சொல்வது சரிதான். ஆனால், யாரிடம் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழைகள்தான், தங்களது ரூபாய் நோட்டுகளை மாற்றினர். கோடீஸ்வரர்கள் யாரும் நீண்ட வரிசையில் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு காத்திருந்தனரா? வசதிபடைத்தவர்கள் யாரும் வரிசையில் காத்திருந்தார்களா?
பணக்காரர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு இந்திய பிரதமர் உதவி செய்துள்ளார். ஏழைகளின் பணத்தை அவர் பறித்துள்ளார்; வசதிபடைத்தவர்கள் பயனடைவதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் பிரதமராக 2014ஆம் ஆண்டு பதவியேற்றபிறகே, நாடு வளர்ச்சியடைய தொடங்கியிருப்பதாக மோடி தெரிவித்து வருகிறார். நாட்டை மக்கள்தான் வழிநடத்துகின்றனர். ஒருவரால் நாட்டை வழிநடத்த முடியாது என்பது குறித்து மோடிக்கு தெரியவில்லை. இத்தகைய கருத்துகளை தெரிவித்து, நாட்டு மக்களை மோடி அவமதித்து விட்டார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியன சிறு மற்றும் குறு வணிகர்களை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயல்படுத்தப்பட்டுள்ளது.
மிகப்பெரிய தொழிலதிபர்களுக்கு காங்கிரஸ் கட்சி எதிரி கிடையாது. அவர்களுக்கு சாதகமாக அரசு செயல்படும்போது, சிறு, குறு வணிகர்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட கூடாது. நாட்டு மக்களின் கோடிக்கணக்கான ரூபாய்களுடன் மெஹூல் சோக்ஸி, நீரவ் மோடி, மல்லையா ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டனர். அவர்களை நாட்டுக்கு திருப்பி எப்படி அழைத்து வருவது என்பது குறித்து மோடிக்கு தெரியாது. அதுகுறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ரஃபேல் விவகாரம் குறித்த விசாரணை நடைபெறுவதை தடுக்கவே, சிபிஐ இயக்குநர் நள்ளிரவு 1 மணியளவில் பதவிநீக்கம் செய்யப்பட்டார். 
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டால், பிரதமர் மோடி, அனில் அம்பானி ஆகியோரது பெயர்கள்தான் வெளியே வரும். இதனாலேயே மோடி அச்சத்தில் உள்ளார். விமான தயாரிப்பில் 70 ஆண்டுகால அனுபவம் கொண்டது ஹெச்ஏஎல் நிறுவனம். ஆனால், காகிதத்தில் கூட விமானம் செய்ய தெரியாத அனில் அம்பானி நிறுவனத்துக்கு, ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறினார்.
சத்தீஸ்கர் மாநில 2ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி திங்கள்கிழமை ஈடுபட்டபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியபோது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த விவரங்களை ராகுலும், சோனியாவும் கேட்கின்றனர்; நிதி மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே இருக்கும் அவர்களிடம் இருந்து தமக்கு நற்சான்றிதழ் தேவையில்லை எனத் தெரிவித்திருந்தார். 
காங்கிரஸ் கட்சியானது, ஒரு குடும்பத்தை மையமாக கொண்டு அரசியல் செய்வதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ராகுல் காந்தி, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com