பொய் விளக்கங்கள் தேவையில்லை; விசாரணையே வேண்டும்: ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் அளித்துள்ள விளக்கத்தை, காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது.


ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் அளித்துள்ள விளக்கத்தை, காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது.
ரஃபேல் விவகாரத்தில், பொய்யான விளக்கங்கள் தேவையில்லை; நியாயமான விசாரணையையே நாடு எதிர்பார்க்கிறது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு, மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரூ.53,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.
போர் விமானங்களுக்கு அதிக விலை அளிக்கப்பட்டுள்ளதாகவும்; விமான உதிரி பாகங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில், பிரதமர் மோடியை காப்பாற்றும் வகையில் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் பொய்களை கூறி வருவதாகவும் ராகுல் கூறியிருந்தார்.
இந்நிலையில், ராகுலின் குற்றச்சாட்டு தொடர்பாக செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்த எரிக் டிராப்பியர், பொய் கூறும் வழக்கம் எனக்கில்லை; ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை. உதிரிபாக தயாரிப்புக்காக, ரிலையன்ஸ் நிறுவனத்தை எந்த நிர்பந்தமும் இன்றி நாங்களாகவே தேர்வு செய்தோம் என்றார். இந்த விவகாரத்தில், டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தரப்பில் அளிக்கப்படும் 4-ஆவது விளக்கம் இதுவாகும்.
ஆனால், எரிக் டிராப்பியரின் கருத்துகளை நிராகரித்துள்ள காங்கிரஸ், பொய்யான விளக்கங்கள் மூலம் ரஃபேல் ஊழலை மூடி மறைத்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ரஃபேல் ஊழலை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. பாஜகவுக்கும் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்கும் இடையிலான கூட்டணியின் மூலம் ரஃபேல் ஊழலை மறைத்துவிட முடியாது. உண்மை ஒருநாள் வெளிவரும். இந்த விவகாரத்தில், பொய்யான விளக்கங்கள் தேவையில்லை; நியாயமான விசாரணையையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும் என்றார் சுர்ஜேவாலா.
இதேபோல், காங்கிரஸ் மூத்த செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறுகையில், இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில், ரஃபேல் விவகாரம் குறித்து டஸால்ட் ஏவியேஷன் தலைமைச் செயல் அதிகாரி விளக்கமளித்திருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. ரஃபேல் ஒப்பந்தத்தில் பல்வேறு சர்ச்சைகளும் சந்தேகங்களும் உள்ளன. 
இதில் நடைபெற்ற ஊழலை மறைக்க அனைத்து உத்திகளையும் மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஆனால், நாங்கள் (காங்கிரஸ்) உண்மையை வெளிக்கொண்டு வருவோம். இந்த ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தணிக்கை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com