மத்திய அரசுக்காக சிஏஜி அறிக்கைகள் தாமதிக்கப்படுகின்றன: ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு

அடுத்த ஆண்டில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசுக்கு சங்கடம் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், ரஃபேல் ஒப்பந்தம், பணமதிப்பிழப்பு ஆகியவை


அடுத்த ஆண்டில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசுக்கு சங்கடம் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், ரஃபேல் ஒப்பந்தம், பணமதிப்பிழப்பு ஆகியவை தொடர்பான, மத்திய கணக்கு தணிக்கை (சிஏஜி) அறிக்கைகள் வேண்டுமென்றே தாமதிக்கப்படுகின்றன என்று ஓய்வுபெற்ற உயரதிகாரிகள் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தக்க சமயத்தில் தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்யாமல் இருப்பது பாகுபாடான செயல் என்றும், சிஏஜி மீதான நம்பகத்தன்மையை அது குறைத்துவிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஜூலியோ ரிபேரியோ, அருணா ராய், பிரசார் பாரதியின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி ஜவஹர் சிர்கார், இத்தாலிக்கான முன்னாள் தூதர் கே.பி.பபியான் உள்ளிட்ட 60 ஓய்வுபெற்ற அதிகாரிகள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை சிஏஜி அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பொறுத்தவரையில், புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டதற்கான செலவு, நாட்டின் ஒருங்கிணைந்த தொகைக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ஈவுத்தொகை, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வங்கிகள் திரட்டிய விவரங்கள், வரி ஏய்ப்பாளர்களை கண்டறிந்து வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட தரவுகளை உள்ளடக்கிய வகையில் விரிவான தணிக்கை அறிக்கை வெளியிடப்படும் என்று அப்போதைய கணக்கு தணிக்கையாளர் சஷிகாந்த் சர்மா கூறியிருந்தார்.
அவர் அவ்வாறு தெரிவித்து 20 மாதங்களாகியும் கூட, பணமதிப்பிழப்பு குறித்த விரிவான தணிக்கை அறிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தணிக்கை அறிக்கையும் செப்டம்பர் மாதத்துக்குள்ளாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது தொடர்பான ஆவணங்களைக் கூட சிஏஜி இதுவரையில் ஆய்வு செய்யவில்லை.
2ஜி அலைக்கற்றை, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, ஆதர்ஷ் வீட்டு ஒதுக்கீடு, காமென்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகள் போன்ற விவகாரங்கள் குறித்து சிஏஜி வெளியிட்ட தணிக்கை அறிக்கைகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.
ஆனால், தற்போதைய அரசுக்கு, 2019-இல் நடைபெறும் மக்களவைத் தேர்தல் வரையில் சங்கடங்களை ஏற்படுத்தி விடக் கூடாது என்ற நோக்கத்தில், பணமதிப்பிழப்பு, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தணிக்கை அறிக்கைகளை சிஏஜி வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதால், அந்த அமைப்பு மீது ஒரு தவறான கண்ணோட்டம் உருவாகி வருகிறது.
பணிமதிப்பிழப்பு, ரஃபேல் ஒப்பந்த தணிக்கை அறிக்கைகளை தக்க சமயத்தில் தாக்கல் செய்யத் தவறியதால் சிஏஜி பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறதோ என்ற எண்ணம் ஏற்படுவதுடன், அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அவ்விரு தணிக்கை அறிக்கைகளையும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com